அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் த.வெ.க தனி பெரும் கட்சியாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருந்து த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். எனவே, மாநிலங்களவை இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அந்த இடத்தை தங்களுக்கே ஒதுக்குமாறு த.வெ.க தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில், காங்கிரஸ் பொறுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்திக்கு மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிரவீன் சக்ரவர்த்தி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த LoP ராகுல் காந்தி மற்றும் தமிழக CM விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.