திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் – தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர்.
இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெட்டும் வேலைச் செய்வதால், உள்ளூரில் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர். பள்ளிக்குச் சரிவர செல்லாததை அறிந்து தாய் போனில் திட்டியதால் மனவேதனைக்குள்ளான 3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் 3 சிறுமிகளையும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில், மாயமான 3 சிறுமிகளும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று அதிகாலை போலீஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
`வீட்டிலிருந்து வெளியேறியது ஏன்?’ என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட பிறகு அறிவுரைக்கூறி பெற்றோர்களிடம் சிறுமிகளை ஒப்படைத்திருக்கின்றனர்.