காதலிக்காக ஐ போன் வாங்க சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட காதலன்… போலீசாரிடம் சிக்கியது எப்படி? – Kumudam

Spread the love

செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளியான படம் மெட்ரோ. இதில் இளைஞர்கள் உல்லாசமாக இருப்பது மற்றும் காதலிகளுக்கு விலை உயர்ந்த பரிசு வாங்கி கொடுப்பதற்கு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவார்கள் அது போன்ற ஒரு சம்பவம் சென்னை அமைந்தகரை பகுதியில் இரவில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகளை பைக்கில் அழைத்துச் சென்றபோது மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தாய் ஒருவர் சென்னை டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக கடந்த 24ஆம் தேதி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் அமைந்தகரை கெனால் சாலை வழியாக இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் வெள்ளைக் கர்சிப் வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு  மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த தனது மகள் கழுத்தில் உள்ள ஒன்றரை சவரன் நகையை திருடிச் சென்றதாகவும் உடனடியாக கூச்சலிட்டும் அந்த நபர் தப்பித்துச் சென்று விட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கீழ்பாக்கம் துணை ஆணையர் கீழ் உள்ள போலீசார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது வெள்ளை கர்சிப் அணிந்து கொண்டு மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது.

இருப்பினும் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும் பொழுது சிக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து முகமூடியை கழட்டாமலேயே செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடன் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் செயின் பறிப்பு திருடனை கண்டுபிடிக்க முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டது. குறிப்பாக செயின்பறிப்பு திருடன் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுகள் இல்லாமல் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் திருடனை கண்டுபிடிப்பதற்கு சவாலாக அமைந்தது. மேலும் ஏற்கனவே இந்த முறையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

இருப்பினும் செயின் பறிப்பு திருடன் வரிக்குதிரை உடம்பில் இருப்பது போன்ற கோடு போட்ட சட்டையை அணிந்திருப்பதை மட்டும் அடையாளமாக வைத்துக் கொண்டு சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்னால் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதும் தொடர்ந்து முகத்தில் கர்சிப் அணிந்து கொண்டு போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சென்னையில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தது தெரிய வந்துள்ளது.

 

குறிப்பாக நடந்த நாளின் மதியம் முதல் நள்ளிரவு வரை முகத்தில்  துணியை கட்டிக் கொண்டு திரிந்துள்ளான். குறிப்பாக மாதவரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இறுதியாக அமைந்தகரை கெனால்  சாலைப் பகுதியில்  மலர்விழியின் மகளிடம் இரவு செயின் பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இவ்வாறாக சம்பவம் நடப்பதற்கு முந்தைய நேரங்கள் முழுவதுமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரிக்குதிரை சட்டையை அணிந்திருந்த நபரை தேடிச்சென்ற போலீசார் இறுதியாக புளியந்தோப்பு பகுதியில் செயின் பறிப்பு திருடனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திருடனை விசாரித்த போது சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அண்ணா சாலையில் உள்ள பிரபல மாலில் துணிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தான் ஒரு பெண்ணை காதலிப்பது ஆகவும் அவருக்கு அடுத்த வாரத்தில் பிறந்த நாள் வர இருக்கிற காரணத்தினால் ஐபோன் பரிசாக வழங்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பல இடத்தில் காசு கேட்டும் கடனாக கிடைக்காத காரணத்தினால், செயின் பறிப்பில் ஈடுபட்டால் மட்டுமே ஒரே நேரத்தில் அவ்வளவு தொகை கிடைக்கும் என செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 

இதையடுத்து போலீஸிடம் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காக நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை வைத்து கட்டிக்கொண்டு நீண்ட நேரம் சென்னை முழுவதும் சுற்றியதாகவும் நான்காவது முறையாக திட்டமிட்டு அமைந்தகரை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். கைதான சரவணன் இடமிருந்து ஒன்றரை சவரன் நகையை போலீசார் மீட்டுள்ளனர். செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, கைதான சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *