
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை கடுமையாக விமர்சித்தார்.
காவல்துறை மானியக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசு வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
“கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும்” – உதயநிதி :
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், எங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல. மக்கள் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பெயர் மாற்ற அறிவிப்பு இல்லை… திட்டம் ரத்து அறிவிப்புதான் வருகிறது” :
தவெக அரசு தொடர்பாக விமர்சனம் தெரிவித்த உதயநிதி, “திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதாக அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்புகள்தான் வெளியாகின்றன” என்றார்.
திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்ததாக தற்போதைய அரசு ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
“தவெக ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது” :
தவெக அரசின் 100 நாள் ஆட்சியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், “முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை தொடர்வது அல்லது ரத்து செய்வது என்ற நிலையே தற்போது உள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் பயணித்தது. ஆனால் தவெக ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட விஷயங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
இலவச சிலிண்டர் வாக்குறுதி குறித்து கேள்வி :
தவெக தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்ட உதயநிதி, “வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். வாக்குறுதிகள் ஏன் குறைக்கப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பினார்.
குற்றச்செயல்கள் குறித்து சட்டப்பேரவையில் பேச்சு :
திமுக ஆட்சியில் போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த உதயநிதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
“ஆணவக் கொலைகள் காதல் மரணங்களாக மாற்றப்படுகின்றன” :
தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட உதயநிதி, “தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. தற்போது ஆணவக் கொலைகள் காதல் மரணங்கள் என்ற பெயரில் மாற்றிக் கூறப்படுகின்றன” என குற்றம்சாட்டினார்.
தவெக எம்எல்ஏ மீதான புகார் குறித்து விவாதம் :
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ தொடர்பாக எழுந்த பாலியல் வன்கொடுமை புகாரை சட்டப்பேரவையில் குறிப்பிட்ட உதயநிதி, “இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
“106 நாட்களில் பல்வேறு புகார்கள்” – உதயநிதி :
தவெக அரசு பதவியேற்ற 106 நாட்களில் ஆளுங்கட்சியினர் மீது பெண்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், “தவெக ஆட்சியின் 106 நாட்களில் 8 காவல் நிலையம் மற்றும் சிறை மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. முன்பு காவல்நிலைய மரணங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறியவர்கள் தற்போது அமைதியாக உள்ளனர்” என விமர்சித்தார்.
“விமர்சனங்களுக்கு இரட்டை நிலைப்பாடு” :
முதலமைச்சரை விமர்சிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆனால் பாஜகவினர் விமர்சனம் செய்தால் அரசு கண்டுகொள்வதில்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மேலும், “உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான்” எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.