ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர்-1’ (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார்.
அப்போது, காந்தாரா-வில் சித்தரிக்கப்பட்ட ‘தெய்வ’ கதாப்பாத்திரத்தை இமிடேட் செய்யும் வகையில் செய்கை செய்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ரன்வீர் சிங் செயல்பட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பொது மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தில், ரன்வீர் சிங் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டிருந்தார்.



அதைத் தொடர்ந்து, அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே 5, 2026 அன்று ரத்து செய்தது. மேலும், தனது நடத்தைக்குப் பரிகாரம் தேடும் வகையில் நான்கு வாரங்களுக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று நடிகர் ரன்வீர் சிங் வழிபட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு நடிகர் ரன்வீர் சிங் நேற்று சென்றிருக்கிறார்.
இது தொடர்பாக சாமுண்டீஸ்வரி கோயில் செயல் அலுவலர் எம்.ஜே.ரூபா, “நடிகர் ரன்வீர் சிங் எங்களுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென வந்தார். கூட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில், ஒரு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து வந்திருந்தார். காலை 7.30 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர், அர்ச்சகர் சுனிலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து அர்ச்சகர் அவரை கர்ப்பக்கிருகத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்த உடனேயே, பக்தர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பே அவர் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டார்” என்றார்.