செட்டிநாடு கண்டாங்கி காட்டன் சேலைகள், நவீன சிந்தட்டிக் சேலைகள், அணிகலன்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள், பூஜைப் பொருட்கள் என பெண்களை ஈர்க்கும் ஸ்டால்கள் நிறைந்துள்ளன. சேலத்தில் தறி நடத்தி நெசவு செய்த சேலைகளை விற்கும் விசாலாட்சி, “எவ்வளவுதான் நவீனம் வந்தாலும் பாரம்பரியத்துக்கு என்று ஒரு தனி மரியாதை எப்போதும் உண்டு” என்கிறார்.
பர்மா தேக்கு மரத்தில் செய்த நுணுக்கமான மரச்சாமான்கள், ஜப்பான் மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து அக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கலைநயம் மிக்க பீங்கான் பொருட்கள், விளக்குகள் என அரிய ஆன்ட்டிக் சாமான்களும் இடம்பெற்றுள்ளன. 10 ரூபாய் ஓலைக் கொட்டான் முதல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரிய பொருட்கள் வரை நியாயமான விலையில் கிடைக்கின்றன. “பாரம்பரியம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல; பாமரர்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வள்ளிக்கண்ணு நாகராஜன் தெரிவிக்கிறார்.
ஏற்காட்டில் 100 ஏக்கர் தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த அவகோடா, மலைவாழை, ஏலக்காய், காபி போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்துள்ளனர்.
கை முறுக்கு, வெள்ளைப் பணியாரம், கவுனி அரிசி சாதம், உக்காரம் என பாரம்பரிய உணவு வகைகளும் தனி ஸ்டால்களில் கிடைக்கின்றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.