“கார்த்திக் சுப்புராஜை எங்கள் தம்பியாக ஏற்கிறோம்..” – விமர்சனத்துக்குள்ளாகும் டோரதி… ஆதரவாக திருநங்கைகள்! – Kumudam

Spread the love

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தின் சித்தரிப்பு, வன்முறைக் காட்சிகள், சாதி மற்றும் ஆணாதிக்கம் பேசப்பட்ட விதம் குறித்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, திருநங்கை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘டோரதி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலர் ‘டோரதி’ திரைப்படம் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை எந்த அளவுக்கு பிரதிபலிக்கிறது என்பது குறித்து பேசினர்.

திருநங்கைகள் பெரும்பாலும் திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களாகவோ, மாந்திரீகம் மற்றும் அமானுஷ்ய விஷயங்களுடன் தொடர்புபடுத்தியோ சித்தரிக்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், ‘டோரதி’ திரைப்படம் தங்களது வாழ்க்கையில் இருக்கும் வலி, போராட்டம் மற்றும் சமூகத்தை எதிர்கொள்ளும் சூழலை வேறுவிதமாக பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

“எங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது!”

‘தோழி’ அமைப்பின் மேலாளர் சபிதா பேசுகையில், திருநங்கைகள் குறித்து இதற்கு முன்பும் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், ‘டோரதி’ திரைப்படம் ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்தின் குரலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

குடும்பத்துக்குள்ளேயே தங்களது பாலின அடையாளத்தை வெளிப்படுத்த முடியாமல் பலர் எதிர்கொள்ளும் மனப்போராட்டங்கள் குறித்து அவர் பேசினார். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களுடனும் படத்தின் சில பகுதிகள் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார்.

பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஏற்றுக்கொள்ளாத மனநிலை காரணமாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இதுபோன்ற யதார்த்தமான விஷயங்களை திரைப்படங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்வது முக்கியம் என்றும் அவர் கூறினார். மேலும், இளையராஜா திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பதும் தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

“ஒரு திரைப்படம் ஆயிரம் கூட்டங்களைவிட பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்!”

‘சென்னை சகோதரன்’ அமைப்பைச் சேர்ந்த சுதா, திருநங்கைகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வகையில் திரைப்படம் பல விஷயங்களைப் பதிவு செய்திருப்பதாகக் கூறினார்.

சிறு வயது முதல் பாலின அடையாளத்தை வெளிப்படுத்த முடியாமல் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கிராமப்புறங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருநங்கைகளுக்கும் காதல், துணை, குடும்பம் போன்ற உணர்வுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுதா தெரிவித்தார்.

ஒரு காலகட்டத்தின் பின்னணியில் கதையை அமைத்து, திருநங்கை சமூகத்தின் வாழ்க்கையை நுணுக்கமாகக் காட்டியிருப்பதாகக் கூறிய அவர், தங்களது அமைப்புகள் நடத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் காட்டிலும் ஒரு திரைப்படம் அதிகமான மக்களை சென்றடையக்கூடும் என்றும் தெரிவித்தார்.

“இளையராஜாவின் பாடல் எங்களுக்கு பெருமை!”

திருநங்கை சமூகத்தின் வாழ்க்கையுடன் இளையராஜாவின் இசையும் இணைந்திருப்பது தங்களுக்கு பெருமை அளிப்பதாக சுதா கூறினார். கிராமப்புறங்களில் இன்னும் பாலின அடையாளத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும், குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு நிர்வாகம் இந்த தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பாலின சமத்துவம் குறித்த புரிதலும், பாலியல் கல்வியுடன் இணைந்த விழிப்புணர்வும் சமூகத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும் சுதா வலியுறுத்தினார்.

“கார்த்திக் சுப்பராஜை எங்கள் தம்பியாக ஏற்றுக்கொள்கிறோம்!”

கடந்த காலங்களில் திரைப்படங்களில் திருநங்கைகள் கேலிக்கும், கேலிச்சித்திரமான சித்தரிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் சுதா தெரிவித்தார். ஆனால், தற்போது ‘டோரதி’ போன்ற படங்கள் தங்களது வாழ்க்கையை இயல்பாகப் பார்க்கும் ஒரு சூழலை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் படத்தின் மூலம் கிராமப்புறங்களிலும் திருநங்கை சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை தங்கள் சமூகத்தின் சார்பில் பாராட்டுவதாகவும், “எங்கள் தம்பியாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

“எங்களை இயல்பாக பாருங்கள்!”

‘சிநேகிதி’ அமைப்பைச் சேர்ந்த வைஷ்ணவி பேசுகையில், திருநங்கைகள் யார், அவர்களது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குப் புரிய வைக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பையும் பாராட்டிய அவர், அந்த கதாபாத்திரத்தின் வாயிலாக திருநங்கைகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். திருநங்கைகளைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைத் தவிர்த்து, அவர்களையும் சமூகத்தின் இயல்பான ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என்றும் வைஷ்ணவி கேட்டுக்கொண்டார்.

“எங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும்” என்பதே தங்களது வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருபக்கம் ‘டோரதி’ திரைப்படம் குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது, திரைப்படத்தைச் சுற்றியுள்ள விவாதத்தை மேலும் கவனிக்க வைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *