உலகையே அச்சுறுத்தும் உயிரியல் ஆயுதம், சர்வதேச சதி, ரா உளவாளிகள் எனக் கதையின் ஆபத்து பெரிதாக இருந்தாலும், அதற்கான பரபரப்போ பதற்றமோ திரையில் உருவாகவில்லை. ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பு, எதிர்பாராத ட்விஸ்ட்கள், ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வம் இரண்டாம் பாதியின் பெரும்பாலான இடங்களில் மிஸ்ஸிங். நாயகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகள் மிக எளிதாகக் கிடைத்துவிடுவதால், உண்மையாகவே அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற உணர்வும் ஏற்படுவதில்லை. வில்லனின் நோக்கத்துக்குச் சொல்லப்படும் காரணமும் பின்கதையும் அழுத்தமாக இல்லை.

முதல் பாதி ஓரளவு ஆர்வத்தைத் தக்கவைத்தாலும், இரண்டாம் பாதியில் படம் மொத்தமாகத் தடம்புரள்கிறது. நீண்ட பிளாஷ்பேக் காட்சிகள், Doku குறித்த விளக்கங்கள் மற்றும் வசனங்கள், அடுத்தடுத்து நீளும் சண்டைக் காட்சிகள் எனப் படமும் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் குறைந்தது 20 நிமிடங்களையாவது எளிதாகக் குறைத்திருக்கலாம்.