Business
oi-Vigneshkumar
சென்னை: ஒரு காலத்தில் கார் வாங்குவது என்பது ஒருவரது வாழ்க்கையின் மிக பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிலிட்டது. அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்களிடையே கூட கார் சொந்தமாக வைத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வியே எழுந்துள்ளது. நாம் வேலை செய்யும் முறை மாறியது, டிராபிக், செலவுகள் என இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இப்போது நமது நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கார்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பல நேரங்களில் டூவீலரில் கூட சீக்கிரம் போய்விடலாம் போல ஆனால் காரில் சென்றால் டிராபிக்கில் சிக்கும் நிலைமையே இருக்கிறது. இதனால் கார் வாங்குவது சரியாக தீர்வாக இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

சொந்த கார்
உதாரணமாக, ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரை ஒருவர் வாங்குவதாக வைத்து கொள்வோம். இதில் ரூ.4 லட்சம் முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை 5 ஆண்டுகளுக்கு கடனாக பெற்றால், மாதாந்திர இஎம்ஐ மட்டும் ரூ.30,000 இருக்கும். ஆனால் காருக்கான செலவு இதோடு முடிவதில்லை. தினமும் 50 முதல் 70 கிலோமீட்டர் பயணம், வார இறுதி சுற்றுலா என மாதாமாதம் எரிபொருள் செலவு தனி! மேலும் இன்சூரன்ஸ், பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும்
செலவுகள்
இது தவிர இப்போது இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் பார்கிங். கார் வாங்கும்போது பெரும்பாலானோர் கவனிக்காத ஒரு முக்கிய செலவு இந்த பார்க்கிங் தான். மும்பை, பெங்களூர், டெல்லி, குருகிராம், நொய்டா போன்ற நகரங்களில் பார்க்கிங் என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடுதல் பார்க்கிங் இடத்திற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அலுவலகங்கள், மால்கள் என எங்கு பார்த்தாலும் பார்க்கிங் கட்டணம் இருக்கும. மேலும், சில நேரங்களில் எங்கு பார்க் செய்யலாம் என்பதை தேடிய அலையவே 15 முதல் 20 நிமிடங்கள் வரை கூட ஆகும்!
இஎம்ஐ மற்றும் இந்த இதர செலவுகள் அனைத்தையும் சேர்த்தால், மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் 35,000 வரை கார் வைத்திருப்பதற்காக செலவாகும். இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதுதான் Depreciation. அதாவது ஷோரூமில் இருந்து வெளியே வந்த நிமிடத்திலேயே புதிய கார் மதிப்பு குறைய தொடங்குகிறது. அதையும் கணக்கிட்டால் தலையே சுற்றிவிடும்.
டாக்சி
மறுபுறம், கார் வாங்காமல் அலுவலகம், வார இறுதி சுற்றுலா என அனைத்திற்கும் டாக்சி பயன்படுத்தினால் மாதத்திற்கு சுமார் ரூ.20,000- ரூ.25,00 வரை செலவாகும். எவ்வளவு பயணிக்கிறோம் என்பதை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மாதாந்திர செலவில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், கார் வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் பல மறைமுக செலவுகள் இதில் இல்லை.
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “கார் வைத்திருக்காதவர்கள் மாதாமாதம் எவ்வளவு EMI, சர்வீஸ், இன்சூரன்ஸ், திடீர் ரிப்பேர், வாகன மதிப்பு குறைவது, பார்க்கிங் பிரச்சினை போன்றவற்றை பற்றி சிந்திக்க தேவையில்லை. தேவைப்படும்போது மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதும்! இளைஞர்களிடையே கார் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை குறைந்து வருகிறது” என்றார்.
தீர்வு என்ன
அதே நேரத்தில், எல்லோருக்கும் டாக்சி மட்டுமே சிறந்த தீர்வாக இருக்காது. குழந்தைகள், முதியவர்கள் உள்ள குடும்பங்களுக்கு பள்ளி, மருத்துவமனை, சுற்றுலா என பல இடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும். அப்படியிருக்கும்போது டாக்சி பயன்படுத்தினால் செலவு அதிகமாகவும். அதுபோன்ற சூழல்களில் கார் வாங்குவது ஓரளவுக்கு சரியானதாக இருக்கும். அதேபோல தினமும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அல்லது அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டியவர்கள், டாக்சி சரிவர கிடைக்காத பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த கார் தான் சரியாக இருக்கும்.
அதாவது சொந்தமாக கார் வாங்கலாமா.. வேண்டாமா என்ற முடிவை ஆசையை பொறுத்து எடுக்கக்கூடாது. மாறாக கார் எந்தளவுக்கு பயன்படும் என்பதை பொறுத்தே எடுக்க வேண்டும். கார் பெரும்பாலான நேரம் பார்க்கிங்கிலேயே நிற்கும் எப்போதாவது தான் வெளியே எடுப்போம் என்றால் டாக்சி தான் பெஸ்ட். அதேநேரம் தினசரி கார் தேவைப்படும் என்றால் சொந்த கார் நீண்ட வைத்திருப்பதே சரியானதாக இருக்கும்!


