2021 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 119, 2022 சீசனில் அது இன்னமும் குறைந்து 115 ஆனது. ‘ஸ்ட்ரைக்ரேட் என்பது ஓவர்ரேட்டட்’ என ராகுல் இதே காலக்கட்டத்தில் பேசியிருப்பார். அந்த லீகில்தான் கோலியும் இருந்தார். விராட் கோலியின் ஆட்டத்தின் மீதும் எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது. இந்த சமயத்தில்தான் கோலி தன்னுடைய கேப்டன்சி பதவியிலிருந்தும் விலகினார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகியது கோலிக்கு பெரிய விடுதலையாக அமைந்தது. மேலும், ஆர்.சி.பி அணியும் கட்டமைப்பும் மாற தொடங்கியது. கோலியை தாண்டியும் சிறப்பாக ஆடக் கூடிய வீரர்களை அந்த அணியின் நிர்வாகம் வாங்கி போட்டது. இது கோலியின் மீதான அழுத்தத்தை குறைத்தது. அவருடைய ஆட்டத்தில் கூடுதல் கவனத்தை குவிக்கும் சௌகரியத்தை கொடுத்தது. விளைவு, விராட் தன்னுடைய ஆட்ட அணுகுமுறையை மாற்ற தொடங்கினார்.
ஆங்கர் இன்னிங்ஸ் ஆடுவதை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய ஆட்டத்தை வேகப்படுத்தினார். ரிஸ்க் எடுத்து பௌலர்களை அட்டாக் செய்து ஆடினார். தான் அவுட் ஆகிவிட்டாலும் தனக்கு பின்னாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வீரர்கள் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை கோலிக்கு துணையாக இருந்தது. இந்த சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 165.
19 வருட ஐ.பி.எல் வரலாற்றில் கோலி எந்த சீசனிலும் இவ்வளவு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதில்லை. கோலியின் மிக மோசமான சீசனாக கருதப்படும் 2020 சீசனில் ஒவ்வொரு 11.29 பந்துக்கு மட்டுமே கோலி ஒரு பவுண்டரியையோ சிக்சரையோ அடித்திருந்தார். ஆனால், இந்த சீசனில் கோலி ஒவ்வொரு 4.15 பந்துக்கும் ஒரு பவுண்டரியையோ சிக்சரையோ அடித்திருக்கிறார்.