தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், “போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதற்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் G. தனஞ்ஜெயன் ஆகியோர் சீமானுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில், “மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன.
அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்னைகளை தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.