காவல்துறை வாகன சோதனை: பதறிய கணவர்; நடுரோட்டில் விழுந்த மனைவியை விட்டுவிட்டு எஸ்கேப்! | Video

Spread the love

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டம், ருத்ராபூர் (Rudrapur) பகுதியில் உள்ள த்ரிசூல் சௌக் (Trishul Chowk) பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அந்த வழியே தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், போலீஸாரைக் கண்டதும் பதறிப்போயுள்ளார். அபராதத்திலிருந்து தப்பிக்க நினைத்த அவர், சட்டென பைக்கை வளைத்து வேகமாகச் செல்ல முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக இந்த திடீர் திருப்பத்தால் நிலைதடுமாறிய பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி சாலையில் தலைகுப்புறக் கீழே விழுந்தார்.

மனைவியே சாலையில் விழுந்துவிட்டதை அறிந்தும், அந்த நபர் பைக்கை நிறுத்தவே இல்லை. போலீசாரிடம் சிக்கிவிடக் கூடாது என்ற பதற்றத்தில், தன் மனைவியைப் பற்றி கவலைப்படாமல் அவர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து பறந்துவிட்டார்.

சாலையில் விழுந்து தவித்த பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரும், பொதுமக்களும் உடனடியாக ஓடிச்சென்று அந்தப் பெண்ணை மீட்டு உதவினர். இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த ஒருவரின் கேமராவில் பதிவாகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. பலரும் அந்த கணவனின் பொறுப்பற்ற செயலையும், மனைவியைக் கைவிட்டுவிட்டுச் சென்ற தன்முனைப்புத் தனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ருத்ராபூர் காவல் துறை அதிகாரி விபவ் சைனி கூறுகையில், “த்ரிசூல் சௌக் பகுதியில் வாகனச் சோதனையின் போது நடந்த இந்தச் சம்பவம் காவல்துறை கவனத்திற்கு வந்தது. கீழே விழுந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், அவருக்கு உரிய அறிவுரைகள் (Counseling) வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

போக்குவரத்து விதிகளை மீறுவதும், போலீஸாரிடமிருந்து தப்பிக்க நினைப்பதும் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *