“தமிழக நலன்களுக்கு எதிராக கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்குச் சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில், மேகதாது அணை விவகாரத்தைத் திசை திருப்பும் நோக்குடன் இந்த வழக்கை கர்நாடக அரசு தொடர்ந்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி அப்போதே கர்நாடக அரசு முதன்மை வழக்கைத் தொடர்ந்தது. இந்தத் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டில் கோரியிருந்த நிலையில், அதைக் காரணமாகக் காட்டித் தான் கர்நாடக அரசு தடை கோரியது. ஆனால், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேசியத் திட்டத் தகுதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து விட்ட நிலையில், திட்டப் பணிகளுக்கு இடைக்காலத் தடை கோரிய கர்நாடக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
அதன்பின் இச்சிக்கலில் எந்த முன்னேற்றமும் நிகழாத நிலையில், மீண்டும் ஒரு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்திருப்பது தமிழக நலன்களுக்கு எதிரான அதன் மனநிலையையே காட்டுகிறது.
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள தடுப்பணையில் தடுத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பது தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும்.
முதல் கட்டமாக 118.45 கி.மீ, இரண்டாம் கட்டமாக 109 கி.மீ, மூன்றாம் கட்டமாக 34 கி.மீ என மொத்தம் 262 கி.மீ தொலைவுக்குப் புதிய பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டால், சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். ஒட்டுமொத்தமாக ரூ.14,400 கோடி தேவைப்படும் இத்திட்டத்திற்கு ரூ.364 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு, 3% பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இதைக்கூட பொறுக்க முடியாமல்தான் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
கர்நாடக அரசின் நோக்கம்
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரியில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டு தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டிற்கு காவிரி உபரி நீரை அதன் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான வழக்கிலேயே இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.