பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி
கோயில் நகரம் எனும் பெருமைக்கு உரியது கும்பகோணம். சைவக் கோயில்களும் ஏராளம். வைணவக் கோயில்களும் தாராளம். இங்கே உள்ள ஆலயங்களில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில். ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும். அவரின் அழகில் சொக்கிப் போவோம் என்று மெய்சிலிர்க்கச் சொல்லும் பக்தர்களிடம் கேட்டால், சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வாழ்வில் ஒருமுறையேனும் வேண்டிக்கொண்டாலே, நம் துக்கங்களும் பாவங்களும் சாபங்களும் நம்மை விட்டு ஓடிப்போகும் என்கிறார்கள்!
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயன காலம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தை உத்தராயன காலம் என்பார்கள். இதைக் குறிப்பிடும் வகையில் பெருமாளை தரிசிக்க இரண்டு வாசல்கள் இருக்கின்றன.தட்சிணாயன காலத்தில் அந்த வாசலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிக்கவும் உத்தராயன புண்ணிய காலத்தில் அந்த வாசலின் வழியே சென்று பெருமாளைத் தரிசிக்கவும் என அமைந்த அற்புத ஆலயம் இது!
பெருமாளின் திருநாமம் ஸ்ரீசாரங்கபாணி. ஆராவமுதன் என்ற திருநாமமும் உண்டு. மூலவர் சாரங்கபாணி, உத்தான சயனத்தில், அதாவது கிடந்த கோலத்தில் கிழக்குப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு உத்தான சாயி என்ற பெயரும் உண்டு.
ஆடி மாதத்தில் ஜேஷ்டாபிஷேக ஏகாதசி விழா என்பது விமரிசையாக நடைபெறும். அப்போது மூலவருக்கு எண்ணெய்க்காப்பு சார்த்தப்படுவது வழக்கம். இதை 45 நாட்கள் வரை களைவதில்லை. அந்த சமயத்தில் உத்ஸவருக்கு வீதியுலாவும் இருக்காது.
புரட்டாசி மாதத்திலும் இப்படியான திருக்கோலத்தில்தான் பெருமாள் காட்சி தருகிறார். ஐப்பசியின் போது அதாவது தீபாவளித் திருநாளின்போது மூலவருக்கு புனுகு சாத்துப்படி நடைபெறுகிறது. இந்தத் தருணங்களிலெல்லாம் பெருமாளை ஸேவிக்க, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். கும்பகோணம் அதைச் சுற்றியுள்ள பக்தர்கள், இந்தக் காலத்தில், தினமும் வந்து பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள்.
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் கோயிலுக்கு திருமழிசை ஆழ்வார் வந்து தரிசித்து வழிபட்டார். அப்போது பெருமாள் சயனத்தில் அதாவது தூங்கிய நிலையில் இருந்தாராம். இதைப் பார்த்துவிட்டு பதறிப் போனார் திருமழிசை ஆழ்வார். கதறிப்போனார். ‘உன்னப் பார்ப்பதற்காக நான் பல தூரங்களையெல்லாம் கடந்து வந்திருக்கேன். நான் உன்னைப் பார்த்துவிட்டேன். நீ என்னை பார்க்கமாட்டாயா? கண் திறந்து நீ என்னைப் பார்த்தால்தானே, எனக்கு மோட்சம்’ என்று அழுதுவிட்டார்.
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்த காவிரிக் கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
என்று பாடினார்.
இதனால்தான் திருமழிசை ஆழ்வாருக்கு பதில் கூறும் விதமாகக் கிடந்த கோலத்தில் இருந்தபடியே எழுந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதைத்தான் உத்தான சயனம் எனப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இன்னொரு சிறப்பும் சாரங்கபாணி கோயிலுக்கு உண்டு.
தொண்டை தேசத்தில் பிறந்தவர் திருமழிசை ஆழ்வார். அவர் நெடுங்காலம் தங்கி, தவமும் பூஜையும் மேற்கொண்ட தலம் கும்பகோணம். அதனால் குடந்தை நகரைத்தை, திருமழிசைப் பிரான் உகந்த இடம் என்று போற்றுகிறார்கள் வைணவர்கள். இங்கே தங்கி வாழ்ந்த திருமழிசை ஆழ்வார், திருமாலின் திருவடியில் சேர்ந்த இடமானது, சாரங்கபாணி கோயிலுக்கு மேற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ள ஆரிய வைஸியர் வீதியில் உள்ளது என்கிறது ஸ்தல புராணம். பெருமாளின் பரமபதத்தை திருமழிசை ஆழ்வார் அடைந்த தலம் என்பதும் கூடுதல் பெருமை.
கும்பகோணத்தில் இன்றைக்கும் சாரங்கபாணி கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சாரங்கபாணியின் மற்றொரு பெயரான ‘ஆராவமுதன்’ என்றால் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் சாரங்கபாணி பெருமாளை, ஆராவமுதா… என்று அழைத்தவர் நம்மாழ்வார். ‘உண்டாலும் தெவிட்டாத அமுதுக்கு ஆரா அமுது’ என்று பெயர்க்காரணம் சொல்கிறது ஸ்தல புராணம்.
கும்பகோணம் என்றாலே பிரமாண்டம். கோயில்கள் என்றாலும் பிரமாண்டம். கோயில் நகரம் என்று சொல்லப்படும் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலுக்கு வந்து கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால்,திருமழிசை ஆழ்வாருக்கு அருளியது போல், நமக்கும் எழுந்து வந்து அருளுவார் சாரங்கன்!
