India
oi-Vigneshkumar
அமராவதி: ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோர பகுதிகளில் அர்னாப் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கிமீ வரை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் புயலானது கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைக்கும் அளவுக்கு சாட்டிலைட் போட்டோக்கலில் பதிவாகி இருந்தது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழையை தரவில்லை. ஆனால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதலே வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அர்னாப் புயலாக வலுப்பெற்ற நிலையில், ஆந்திர பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

அர்னாப் புயல்
இதற்கிடையே இன்று காலை அர்னாப் புயல் தொடர்பாக இந்தியாவின் INSAT-3DS சாட்டிலைட் எடுத்த போட்டோக்கள் புயலின் பிரம்மாண்டத்தை காட்டுவதாக இருக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த அர்னாப் புயல், ஆந்திர கடலோர பகுதிகளை தாக்கிய நிலையில்.. அதன் மேகக்கூட்டங்கள் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பரவியிருப்பது சாட்டிலைட் படத்தில் தெரிகிறது.
150 கிமீ வேகத்தில் காற்று
இன்று காலை புயல் மிக தீவிர புயலாகவே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி, நரசாபூருக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனாமுக்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் கரையை கடந்தது. புயலின் மையம் நிலப்பகுதிக்குள் நுழைந்தபோதும் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியது. சில இடங்களில் 150 கிமீ வேகத்திலும் கூட பலத்த காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
INSAT-3DS சாட்டிலைட் காலை 9.30 மணி முதல் 9.57 மணி வரை புயலின் நிலையை பதிவு செய்துள்ளது. அதில் புயலை சுற்றி பரந்து விரிந்த மேகக்கூட்டங்களும், அதன் மையத்தில் அடர்த்தியாகக் காணப்படும் மேகங்களும் தெளிவாகத் தெரிகின்றன. சாட்டிலைட் போட்டோவில் காணப்படும் பிரகாசமான வெள்ளை நிற மேகங்கள், அதிக உயரத்தில் உருவாகும் குளிர்ந்த மேக உச்சி பகுதிகளை குறிக்கின்றன.
கிட்டத்தட்ட பாதி இந்தியா
ஒரு கட்டத்தில் புயலானது கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைக்கும் அளவுக்கு சாட்டிலைட் போட்டோக்கலில் பதிவாகி இருந்தது. இத்தகைய மேகங்கள் தீவிரமான காற்று மேலெழுச்சி மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். புயலை சுற்றி வளைந்து காணப்படும் மேக பட்டைகள், அதன் மையத்தை நோக்கி ஈரப்பதம் நிறைந்த காற்று சுழன்று செல்வதை காட்டுகின்றன.
அதேநேரம் புயல் கரையை கடந்துவிட்டதால் ஆபத்து முழுமையாக முடிந்துவிட்டது என சொல்லிவிட முடியாது. எந்தவொரு புயலாக இருந்தாலும் அது கடல் பகுதியிலிருந்து விலகி நிலப்பகுதிக்குள் நகரும்போது, நிலத்தின் உராய்வு மற்றும் வெப்பமான கடல் நீரிலிருந்து கிடைக்கும் எனர்ஜி குறைவதால் புயலின் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
ஆபத்து இருக்கு
ஆனால், இந்த காலகட்டத்திலும் ஆந்திர பிரதேசம் மற்றும் அண்டை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும். இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குதல், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. பலத்த காற்றால் மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் சேதமடைவது, போக்குவரத்து பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
புயல் நிலப்பகுதிக்குள் எந்த பாதையில் நகர்கிறது, அதன் மேகக்கூட்டங்கள் அடுத்ததாக எந்தெந்த பகுதிகளில் மழையை கொடுக்கின்றன என்பதுதான் அடுத்தகட்டத்தில் முக்கியமாகக் கண்காணிக்கப்படும். கரையைக் கடந்த பிறகும் புயலின் தாக்கம் கடலோரப் பகுதிகளைத் தாண்டி உள்நாட்டுப் பகுதிகளிலும் தொடரக்கூடும் என்பதால், மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களை கேட்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.