`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக”த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, உடனடியாக ராமதாஸ் தலைமையிலான பாமகவும் கூட்டணி சேர்ந்து சாத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இவர்களால் தடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தற்போது கட்சியின் தலைவரே சசிகலாவை நீக்கியிருக்கிற நிலையில் என்ன நடந்தது என சக்ரவர்த்தியிடம் கேட்டோம்.

‘’பத்து வருஷமா எம்பாட்டுக்கு ஒழுங்கா கட்சியை நடத்திட்டிருந்தேன் சார். தேடி வந்தது அவங்கதான். சரி அம்மா கூட இருந்தவங்கங்கிற ஒரு மரியாதையில கட்சியை முறையா நடத்துவாங்கனு நம்பினதால பொதுச்ச் செயலாளரா அவங்களை நியமிச்சு தேர்தலைச் சந்திச்சோம்.
சில தொகுதிகள்ல எங்க வேட்பாளர்கள் கணிசமான ஒட்டுகளை வாங்கவும் செய்தாங்க.
ஆனா தேர்தலுக்குப் பிறகு…? ஆளைப் பார்க்க கூட முடியலையேங்க. தேர்தல் முடிவு திமுக, அதிமுகவுக்கே அதிர்ச்சியானதாத்தான் இருந்தது. நாங்க எம்மாத்திரம்? அதுக்காக அப்படியே முடங்கிக் கிடந்தா? நிர்வாகிகள் நியமனம்., ஏன் ஒரு மீட்டிங் கூட இதுவரை போட்டது கிடையாது.
பொதுச் செயலாளரை ஆலோசிக்காம நான் மட்டும் மீட்டிங் போட்டா சரியா இருக்குமா? அதனால சந்திச்சுப் பேசலாம்னு போயஸ் கார்டன் போனா வீட்டுக்குள்ளேயே விடமாட்டேங்குறாங்க.
பி.ஏ வந்து மேடம் வேலையா இருக்காங்கனு பதில் சொல்றார். அல்லது திவாகரன் பையன் ஆனந்த்தைதான் பார்க்க முடியுது. கட்சித் தலைவராலயே பொதுச் செயலாளரைப் பார்க்க முடியலைன்னா அந்தக் கட்சி எப்படிங்க நடக்கும்?