தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், நந்தமுரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சுரேஷ் பாபு உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக, 84 வயதான மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் படத்தின் தொடக்கக் காட்சியை இயக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகவேந்திர ராவ் நடிகை கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்து இழுத்து அவருக்குக் காட்சியை விவரிப்பதும், பின்னர் அதேபோல் நடிகை கிருத்தி ஷெட்டியின் கையைப் பிடித்து வழிநடத்துவதும் பதிவாகியுள்ளது. மேலும், வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் ஆகியோருக்கு காட்சியை விளக்கும்போது, கிருத்தி ஷெட்டியின் தோள் மீது கை வைத்துப் பேசும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் ராகவேந்திர ராவின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “காட்சியை விளக்குவதற்கு பெண்களை இப்படித் தொட வேண்டிய அவசியம் என்ன? இது மிகவும் அநாகரிகமான நடத்தை” எனச் சாடி வருகின்றனர். பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடும் உரிமை இவருக்கு யார் கொடுத்தது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், ஒரு தரப்பினர் ராகவேந்திர ராவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “அவர் ஒரு மூத்த இயக்குனர். படப்பிடிப்பின் போது நடிகர்களை சரியான கோணத்தில் நிறுத்துவதற்காக மட்டுமே அவர் அவ்வாறு வழிகாட்டினார். இதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை’ எனவும் வாதிடுகின்றனர்.
இந்த சர்ச்சை மற்றும் வைரல் வீடியோ குறித்து இயக்குனர் ராகவேந்திர ராவ் தரப்பிலிருந்தோ அல்லது நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.