
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். கம்சனை அழிக்க எட்டாவதாகப் பிறந்தவன் கிருஷ்ணன். அஷ்டமி எனும் எட்டாவது நாளில் ஜனித்தவர் கண்ண பரமாத்மா. ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணாவதாரம் அமைந்தது என்கின்றன புராணங்கள்.
கிருஷ்ண ஜயந்தி நன்னாளில் என்ன செய்யணும்?
முதல்நாளன்று, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். மறுநாளான கிருஷ்ண ஜயந்தி நாளில், பிரம்ம முகூர்த்த வேளையில், வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கவேண்டும். வாசலில் இருந்து பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைவதுதான் நமக்குத் தெரியுமே..!
காலையில் இருந்து விரதம். விரதம் என்கிற உண்ணாநோன்பு இருக்கமுடியாதவர்கள், முதியவர்கள், குழந்தைகள், ஏதேனும் சாப்பிட்டுக்கொள்ளலாம். இது விரத தோஷமெல்லாம் இல்லை. மாலையில்தான் பூஜை. இரவில்தான் கிருஷ்ணர் ஜனித்தார். கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
’எனக்கு வயசாயிருச்சு. முன்ன மாதிரி விரதம்மெல்லாம் இருக்கமுடியல. சாப்பிடுறதுக்கு முன்னாடி மாத்திரை சாப்பிட்டாகணும். அதனால பட்டினி இருக்கமுடியறதில்லை’ என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதீர்கள். அவதார பூஜைத் திருநாளை, குற்றவுணர்வுடன் கொண்டாடாதீர்கள். மலர்ச்சியுடன் இருங்கள். ‘அந்தக் காலத்துல முடிஞ்சது. இப்ப உடம்பு மூப்பு. ஒத்துழைக்கலை’ என்பதை மிக அழகாகக் கடந்து செல்லுங்கள். நாற்காலியிலோ சோபாவிலோ அமர்ந்துகொண்டு, வீட்டார் கொண்டாடுவதை ஆனந்தமாக கண்டு மகிழுங்கள்.
மாத்திரை சாப்பிடுபவர்கள், திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். விதிவிலக்கு உண்டு. பாலும் பழமும் மட்டும் சாப்பிடலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். பகவத் கீதை பாராயணம் பண்ணலாம். விரதம் மேற்கொள்வோர், மாலையில் பூஜைகள் முடிந்த பிறகு, இரவில் நைவேத்தியங்களை சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலையில் குளித்து, பூஜை முடித்து, விரதத்தை நிறைவு செய்வதே வழக்கம். முதல்நாள் தூய்மைப்படுத்தும் பணி, மறுநாள் கிருஷ்ண ஜயந்தி. அதையடுத்த மூன்றாவது நாள், விரத நிறைவு!
ஏழை நண்பன் கொடுத்த அவல், அதை பேரன்புடன் வாங்கிக்கொண்ட கிருஷ்ணர் என படித்திருக்கிறோம்தானே. அதனால்தான் ஏழை பணக்கார வித்தியாசமெல்லாம் பார்க்காத கிருஷ்ணரின் ஜயந்தி நாளில், அவல் பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அவல் பாயசம், தேங்காயில் செய்யப்பட்ட அவல், புளியில் செய்யப்பட்ட அவல், தயிரில் செய்யப்பட்ட அவல் பிரசாதமாக படைத்துச் சாப்பிடுகிறோம். குசேலனை குபேரனாக்கிய கண்ணன், நம் ஏழ்மையையும் விரட்டுவான். அறியாமை எனும் இருளில் இருந்து கைப்பிடித்து அழைத்து வந்து ஒளிமயமான வாழ்வைத் தந்தருளுவான் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
‘கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான். ஏழைக்கண்ணீரைக் கண்டதும் கண்டதும் கண்ணன் வந்தான்’ என்று நாமும் பாடுவோம். பரவசமாவோம்! ‘வா கண்ணா… வந்து வரங்களை தா கண்ணா!’