ஏற்கனவே பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுபான விற்பனை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக “ரெஸ்டோ பார்” (Resto Bar) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதில், உணவக வசதியுடன் கூடிய தரமான சூழலில் மதுபானங்களை அருந்தும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இயங்கி வரும் வழக்கமான பார்களை விட, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்தும் வகையில் வசதியான இருக்கைகள், மேம்பட்ட சேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் “Restaurant with Bar” மாதிரியைப் போலவே, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அனுமதியை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போதுள்ள சாதாரண பார்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, தரமான ரெஸ்டோ பார்களை ஊக்குவிக்கும் திட்டம் வகுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போதுள்ள சில உரிம வகைகளில் மதிப்புக்கூட்டுவரி (VAT) வசூலிக்கப்படாத நிலையில், ரெஸ்டோ பார் முறை மூலம் வரி வருவாயை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டம் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அல்லது தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே, வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்திற்கு பிறகே முழுமையான நிலை தெளிவாகும்.


