தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். சினிமா பின்புலம் இல்லாமல் பல்வேறு சிரமங்களை கடந்து முன்னணி நடிகராக உயர்ந்த அஜித்தை, ரசிகர்கள் ’தல’, ‘AK’, ‘அல்டிமேட் ஸ்டார்’ என செல்லமாக அழைத்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானது. அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளிலும் இந்த கோஷம் எதிரொலித்தது.
இதனால், ரசிகர்களுக்கு அஜித் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். பொது இடங்களில் மற்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்ப வேண்டாம் என்றும், தனது பெயருடன் வேறு எந்த முன்னொட்டையும் சேர்த்து அழைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், “யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்” என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சினிமாவைத் தாண்டி கார் ரேஸிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித், தனக்கென ஒரு அணியை உருவாக்கி பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், போர்ச்சுகலில் உள்ள போர்டிமாவ் சர்க்யூட்டில் அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத்தின் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளதாக அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். லவ் யூ ஆல்” என அஜித் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, அவருக்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதில் சில ரசிகர்களின் கமெண்ட்கள் தான் தற்போது இணையத்தில் ஹைலைட்டாக மாறியுள்ளன.
“எங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும், வேலை இருக்கு அண்ணா” என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். அஜித் ரசிகர்களிடம் “உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என அறிவுரை கூறியிருந்த நிலையில், தற்போது தனது ரேஸுக்கு ரசிகர்களின் ஆதரவை கேட்டிருக்கிறார். இதை வைத்தே அந்த ரசிகர், “முதலில் எங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் அண்ணா” என அஜித்திடம் செல்லமாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
https://www.instagram.com/p/DeLVdFghE9n/?stkn=MTFseWM1dDhtdmd6OA%3D%3D
அஜித் சொன்ன வார்த்தையையே அவரிடமே திருப்பிப் போட்ட ரசிகரின் கமெண்ட் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்களும், “அண்ணனுக்கே செக் வைத்துவிட்டார்களே!”, “அஜித் சொன்னதை அஜித்திடமே திருப்பி சொல்லிட்டாங்க!” என கலகலப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://x.com/maahemaha1998/status/2107715177483551196?s=20
ஒருபக்கம் அஜித்தின் ரேஸ் பயணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மறுபக்கம் “குடும்பத்தை கவனிக்கணும் அண்ணா” என்ற ரசிகர்களின் செல்லமான கோரிக்கையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

