நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இதுதான் என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இன்று இருக்கும் இந்த நிலையை அடைவதற்கு எங்களது எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம்.

இரத்தமும் வியர்வையும் சிந்திப் போராடியிருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் தடுமாறி, தோல்வியடைந்து, கீழே விழுந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இரட்டிப்பு வேகத்துடன் எழுந்து நின்று வெற்றி பெற நாங்கள் தவறியதே இல்லை.
எங்களது பிள்ளைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வளர்த்துள்ளோம். அவர்கள் தங்களது வெற்றியைக் கண்டு தலைக்கனம் கொள்ளவோ, அல்லது பிரபலங்களின் பிள்ளைகள் என்ற தகுதியைத் தவறாகப் பயன்படுத்தவோ நாங்கள் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
அவர்களும் தங்களது அடையாளத்தை எதற்கும் தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. எங்களது பிள்ளைகளை நினைத்து நாங்கள் மட்டற்ற பெருமிதம் கொள்கிறோம்.