“குப்பை, மண்ணுல இருந்து தங்கம் எடுக்குறாங்கன்னா நம்புவீங்களா?”
கொஞ்சம் ஆச்சர்யமா தான் இருக்கும். ஆனா, இது உண்மை. நகைக் கடைகள்ல இருந்து வெளியேறுற குப்பை மண்ணைச் சேகரிச்சு, அதைத் தண்ணீர்ல அலசி, சல்லடை போட்டு, பல கட்டங்களா பிரிச்சு, அதுக்குள்ள ஒளிஞ்சிருக்குற தங்கத்தைக் கண்டுபிடிக்கிற ஒரு தொழில் தமிழ்நாட்டோட பல மாவட்டங்கள்ல நடக்குது.
திருநெல்வேலியிலயும் இந்த தங்க மண் சலிக்கும் தொழிலை நம்பி வாழுறவங்க இருக்காங்க. நகை செய்யும்போது தெரியாம கீழே விழுந்த தங்கத்தூள், சின்னச் சின்ன துண்டுகள் எல்லாம் கடை குப்பையோட சேர்ந்து போயிடும். கடைக்காரர்களுக்கே தெரியாம போற அந்தத் தங்கத்தைத் தேடித்தான் இவர்களோட பல நாள் உழைப்பு தொடங்குது.
வெளியில இருந்து பார்க்குறதுக்கு, மண்ணையும் குப்பையையும் அலசுற ஒரு சாதாரண வேலை மாதிரிதான் தெரியும். ஆனா, அந்த மண்ணுக்குப் பின்னாடி பல மணி நேர உழைப்பு இருக்கு. அதைவிட முக்கியமா, “இன்னைக்கு ஏதாவது தங்கம் கிடைக்குமா?”ங்கிற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கு.
அப்படித்தான் திருநெல்வேலியில இந்தத் தொழில் செஞ்சிட்டு இருக்குற அப்துல்காதரைச் சந்திச்சோம். ஏழு வயசுல இருந்து இந்த தொழில் செஞ்சிட்டு வர்றார்.
அவர்கிட்ட பேசினோம்.
“சின்ன வயசுலயே இந்த வேலைக்கு வந்துட்டேன். இப்ப வரைக்கும் இதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்…”னு அவர் சொல்லும்போது, அவரோட கைகள்ல இருந்தது மண். ஆனா, அந்த மண்ணுக்குள்ள இருந்தது பல வருஷ வாழ்க்கை.
மண்ணை அலசுற வேலை… அவ்வளவு சுலபம் இல்ல!
காலையில 3:00 மணிக்கே எழுந்து, கடையில இருந்து குப்பையோட சேர்ந்து வர்ற மண்ணை அள்ளிட்டு வந்து, ஓடையில போய் அலசுவோம். பார்க்குறதுக்கு சாதாரண மண்ணு மாதிரிதான் இருக்கும். ஆனா, அதுக்குள்ள எங்களுக்கு தேவையானது ஒளிஞ்சிருக்கும்.
முதல்ல அந்த மண்ணை ஒரு இடத்துல போட்டு தண்ணீர் ஊத்தி அலசுவோம். அதுல இருக்குற மணல், மண் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிய ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் சல்லடை போட்டு திரும்பத் திரும்ப சலிச்சு எடுப்போம்.
மண்ணை அரைச்சு, அலசி, சலிச்சு எடுத்துக்கிட்டே போகும்போது, அளவு கொஞ்சம் கொஞ்சமா குறையும்.” இவர்களுக்கு வேண்டியது மண் இல்ல… அதுக்குள்ள கலந்திருக்குற உலோகங்கள்தான்.
செம்பு, ஈயம், நாகம், இரும்புத்தூள் என பல உலோகங்கள் அதுல கலந்திருக்கும். அதிலிருந்து தங்கத்தை மட்டும் பிரிச்சு எடுக்குறதுதான் அடுத்த வேலை.