கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியுடன் தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். அந்த தோழி கன்னியாகுமரி மத்திய மாவட்ட த.வெ.க. இளைஞரணியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மாலை சுமார் 4 மணியளவில், கல்லூரி மாணவியும் த.வெ.க-வைச் சேர்ந்த அவரது தோழியும் தக்கலை அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரி மத்திய மாவட்ட த.வெ.க. செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர், த.வெ.க. பெண் நிர்வாகியைப் பார்த்து காரை நிறுத்தியுள்ளார். “உங்கள் ஊர் வழியாகத்தான் செல்கிறேன், காரில் ஏறுங்கள்” எனக் கூறியுள்ளார். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால் த.வெ.க பெண் நிர்வாகி காரில் ஏறியதுடன், தனது தோழியான மாணவியை வற்புறுத்தி காரில் ஏற்றியுள்ளார்.
முதலில் மூலச்சல் பகுதியில் பெண் நிர்வாகியை இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், குலசேகரத்தைச் சேர்ந்த மாணவியிடம், “நானும் குலசேகரம் செல்லவேண்டியுள்ளது, உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன்” எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். வழியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காரை நிறுத்தியபோது, தனியாக இருந்த மாணவியிடம் கிறிஸ்டோபர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஆத்திரமடைந்து கிறிஸ்டோபரை கண்டித்துள்ளார். இதையடுத்து, மாணவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட கிறிஸ்டோபர், அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.