நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11-ம் தேதி பழுது காரணமாக நாகர்கோவில் 13-வது யார்டில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை, 18-ம் தேதி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, இருக்கைக்குக் கீழே அப்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து, தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், 14-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடையில் தனியாகச் சென்ற அப்பெண்ணை, செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் (31) ஆளில்லாத ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கிக் கொன்றது தெரியவந்தது. உடனடியாகத் தப்பினால் சிக்கிக்கொள்வோம் எனக் கருதி, பிணத்துடன் சுமார் 7.30 மணி நேரம் பெட்டிக்குள்ளேயே பதுங்கியிருந்த ஐயப்பன், காலை 8 மணியளவில் பயணிகள் நடமாட்டம் தொடங்கியதும் சாதாரணப் பயணி போல வெளியேறித் தப்பியுள்ளார்.

கடந்த 4 மாதங்களாக ரயில் நிலைய வளாகத்திலேயே சுற்றித் திரிந்த ஐயப்பனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் ஐயப்பன் திடீரென மயங்கி விழுந்ததால், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மன ரீதியான சோதனைகளும் நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் குஜராத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே, ரயில் பெட்டிக்குள் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.