குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Spread the love

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குமாரபாளையம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக உறவினர்கள் கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் கொடூரத்தை அறிந்த உள்ளுர் மக்கள், 59 வயதான அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். காவல்துறையினர் அவரை மீட்ட நிலையிலும், ஆத்திரம் தீராத மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, `அவனை எங்களிடம் ஒப்படையுங்கள்..” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் அந்த நபர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டதால்… மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், “3 வயது மற்றும் 12 வயது சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 59 வயது மற்றும் 62 வயதுடைய இரண்டு நபர்களைக் கைதுசெய்திருக்கிறோம். ஒருவரை சிறையில் அடைத்துள்ளோம்‌. மற்றொரு நபரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டு சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலைய கதவுகள் மூடப்பட்டன. கூடுதல் பாதுகாப்பு வழங்கி அந்த நபர்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *