கும்பகோணம்: ஃப்ளக்ஸ் வைப்பதில் வாக்குவாதம் – தவெகவினர் தாக்கியதில் காவலருக்கு கையில் எலும்பு முறிவு!

Spread the love

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், காளி. இருவரும் தவெக-வில் வார்டு உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றி பெற்ற வினோத் அமைச்சராகியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் வினோத்தை வாழ்த்தும் விதமாக ஆங்காங்கே தவெக-வினர் ஃப்ளக்ஸ் வைத்து வருகின்றனர். இதேபோல் சில தினங்களுக்கு முன்பு ஃப்ளக்ஸ் ரெடி செய்த அருண், காளி இருவரும் அதனை சாலையில் வைத்து ஃப்ரேமில் ஒட்டிக் கொண்டிருந்துள்ளனர்.

போலீஸ் தேவேந்திரன்

அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் தேவேந்திரன், இருவரிடமும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாதபடி இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே வைத்து ஃப்ளக்ஸ் ஒட்டுகிறீர்கள். இரவு நேரம் என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது ஓரமாக வைத்து ஒட்டுங்கள் என்றுள்ளார். இதை அவர்கள் கேட்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து தேவேந்திரன் மீண்டும் சொல்ல அருண், காளி இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீற… தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவரும் காவலர் தேவேந்திரனை தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதில், தேவேந்திரனின் வலது கையில் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து மற்ற போலீஸாருக்குத் தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்குச் சென்று கை முறிவு ஏற்பட்ட தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கும்பகோணம்
கும்பகோணம்

காவலரைத் தாக்கிய அருண், காளி இருவர் மீதும் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். “ஃப்ளக்ஸை சாலையின் நடுவே போட்டு ஒட்டியதை ஓரமாக வைத்து செய்தால் என்னவென்று தேவேந்திரன் கேட்டதால், வாக்குவாதம் செய்து அவரை தாக்கி கைமுறிவுக்கு அருண், காளி இருவரும் காரணமாகியிருக்கிறனர். போலீஸை தாக்கிய சம்பவம் வெளியே தெரிந்தால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் என்பதால்,

பாதிக்கப்பட்டது ஒரு போலீஸாக இருந்தும் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைப்பதில் போலீஸார் மும்முரம் காட்டினர். ஆனாலும் இந்தச் சம்பவம் மெல்ல கசிந்து வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தவெக தலைவர் விஜய் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்களில் மெளனம் கலைத்து முதல்வர் விஜய் தன் கட்சியினருக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கட்சியினர் கட்டுக்குள் இருப்பார்கள். தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இல்லை என்றால் பொதுமக்களிடத்தில் அவப்பெயரை சம்பாதிக்க நேரிடும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *