குழந்தையை கவ்வி இழுத்த பிட்புல்.. 6 மாத குழந்தை மீது கொடூர தாக்குதல்.. பதறவைக்கும் சம்பவம்! | Haryana Pitbull Attack: 6-Month-Old Baby Attacked in Sonipat, CCTV Footage Shocks Residents

Spread the love

India

oi-Vigneshkumar

சோனிபட்: ஹரியானா மாநிலம் சோனிபட்டில் 6 மாத குழந்தையை பிட்புல் நாய் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை அவரது அத்தை கையில் தூக்கி கொண்டு சாலையில் அழைத்து சென்றபோது, திடீரென பாய்ந்து வந்த நாய் குழந்தையை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

நமது நாட்டில் நாய்கள் தாக்குதல் இப்போது பெரிய பிரச்சினையாக மாறியுல்ளது. தெருநாய்கள் தாக்குதல் மட்டுமின்றி, செல்ல பிராணிகளும் சில முறை தாக்குவது பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Haryana Pitbull Attack dog Haryana Pitbull Attack

பிட்புல் நாய் தாக்குதல்

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள சிக்கா காலனியில் பிட்புல் தாக்குதல் நடந்துள்ளது. குழந்தையின் அத்தை அக்குழந்தையை அழைத்து கொண்டு வெளியே போய் உள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த பிட்புல் நாய், குழந்தையை நோக்கி வேகமாக ஓடி வந்து பாய்ந்துள்ளது. நாய் பாய்ந்த வேகத்தில் குழந்தையை கையில் வைத்திருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருடன் குழந்தையும் சாலையில் விழுந்துள்ளது. இதையடுத்து குழந்தையை நாய் தனது வாயால் கவ்வியுள்ளது.

குழந்தையை நாயிடம் இருந்து மீட்க அந்தப் பெண் உடனடியாக முயன்றுள்ளார். அங்கிருந்த மற்றவர்களும் நாயை பிடித்து குழந்தையை விடுவிக்க முயன்றுள்ளனர். ஆனால், நாய் குழந்தையை விடாமல் தொடர்ந்து கடித்து, சாலையில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. சிலர் நாயை பிடித்து இழுத்த போதும் அது குழந்தையை விடாத காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கடுமையான காயம்

இந்த தாக்குதலில் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரத்தம் சொட்டும் நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, சிகிச்சைக்காக ரோத்தக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிக்கா காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் நடமாடும் பகுதியில் இவ்வளவு வெறிபிடித்த பிட்புல் நாய் கட்டுப்பாடின்றி வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், பிட்புல் போன்ற ஆபத்தான இன நாய்களை வீட்டில் வளர்க்கும்போது உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் இதுவரை குழந்தையின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

சிக்கல்

அதேநேரம் பிட்புல் தாக்குதல் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. பிட்புல் நாய் தாக்குதலில் குழந்தைகள் காயமடைவது தொடர்கிறது. கடந்த ஆண்டு டெல்லியின் வினய் என்க்ளேவ் பகுதியில் 6 வயது சிறுவனை பிட்புல் நாய் கடுமையாக தாக்கியது. இதில் சிறுவனின் வலது காதின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதுடன், அவருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நாயின் உரிமையாளர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாடுகள்

பிட்புல் போன்ற நாய்களை வளர்க்கும்போது அதற்கு உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது இப்படி தான் மாறும். இந்தியாவில் தற்போது வரை பிட்புல் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க நாடு முழுவதும் தடை எதுவும் இல்லை. எனினும், சில மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆபத்தானதாக கருதப்படும் சில நாய் இனங்களை வளர்ப்பதற்கு உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உதாரணமாக, காசியாபாத் மற்றும் சண்டிகரில் பிட்புல், ராட்வைலர் உள்ளிட்ட சில ஆபத்தான இன நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *