குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம் | Tamil Nadu Woman Rescued from Kuwait After Plea for Help Goes, What happened and how she saved

Spread the love

International

oi-Vigneshkumar

குவைத்: குவைத்தில் சிக்கி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த வனிதாவை இந்திய தூதரகம் உடனடியாக மீட்டுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வீடியோ மூலம் உதவி கோரிய நிலையில், அவரது வேண்டுகோளுக்கு இந்திய தூதரகம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே இந்தியா திரும்பிய அவர் நலமுடன் இருப்பதாகவும் தன்னை மீட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தியாவை சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் பலரும் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வார்கள். வீட்டு வேலை தொடங்கி பல விஷயங்களுக்கு இதுபோல வளைகுடா நாடுகளுக்கு செல்வார்கள். சில ஆண்டுகள் எப்படியோ பல்லை கடித்து வேலை செய்தால் நல்ல நிலைமையில் செட்டிலாகிவிடலாம் என்பதாலேயே பலரும் இதுபோல வேலைக்கு செல்கிறார்கள்.

Vanitha Kuwait Rescue

கள்ளக்குறிச்சி பெண்

இருப்பினும், சில நேரங்களில் ஏஜெண்டுகளிடம் சிக்கி சிலர் மோசமான இடங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வனிதா கடந்த 3 மாதங்களாக குவைத்தில் இருந்துள்ளார். இருப்பினும், அங்கு அவர் நரக வேதனையை அனுபவித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அங்கு தான் சித்திரவதைக்கு ஆளாகி வருவதாக அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2 மாதங்களாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இனிமேல் தன்னால் குவைத்தில் இருக்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் கூறியிருந்தார். அந்த வீடியோவில் கைகளை கூப்பி உதவி கோரிய வனிதா, தன்னை மீட்டு தாய்நாடான இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வீடியோ

வனிதாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மேலும், இது தமிழ்நாடு அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவரது தாய் மற்றும் குடும்பத்தினரும் கண்டறியப்பட்டனர். பின்னர் வனிதாவை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினரும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக வனிதாவின் தாய் வெண்ணிலா கூறுகையில், குவைத்தில் வேலை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய ஏஜென்ட் தனது மகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார். வனிதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், வீட்டு வேலை செய்வதற்காக குவைத் சென்றதாகவும், தற்போது அங்கு கொடுமைகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்பு

இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், வனிதாவை மீட்டு வர நடவடிக்கை எடுத்தது. உள்ளூர் அதிகாரிகளும் உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுக்கவே வனிதா தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட வனிதா இந்திய தூதரகத்தில் இருந்து புதிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி

அந்த வீடியோவில் வனிதா, “நான் இந்திய தூதரகத்தின் உதவியை நாடினேன். தக்க நேரத்தில் அவர்கள் எனக்கு உதவினார்கள். இப்போது இந்திய தூதரகத்தில் இருக்கிறேன். எனக்கு இப்போது நல்ல உடையும், நல்ல உணவும் கிடைக்கிறது. இந்திய தூதரகத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸ் கூறுகையில், “வனிதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே அவரது குடும்பத்தினரை கண்டறிந்து புகார் பெற்று, நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *