கூட்டணிக்குள் தொடங்கிய கலகம்…. விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் செ.பெ..? – Kumudam

Spread the love

சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யில் காங்கிரஸும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு விஜய் தலைமை வகிக்கும் நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாகி வருகிறது. விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெக தரப்பில் தொடர்ந்து கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் ஏற்கெனவே, காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் இணைந்து எடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது தொடர்பாக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாடு காங்கிரஸிடம் இருந்தால், கூட்டணிக் கட்சிகளும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அந்தக் கூட்டணியில் இருப்பதன் அவசியம் என்ன என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடனேயே கூட்டணி அமைப்பது நேர்மையான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தவெக தரப்பில் விஜய்யை 2029 பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கருத்துகளுக்கும், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியை முன்னிறுத்தும் நிலைப்பாட்டுக்கும் இடையேயான முரண்பாடு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 

முன்னதாக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமாரும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

தற்போது கூட்டணி அமைப்பு உருவாகியுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் கருத்துகள் கூட்டணிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *