கூண்டோடு ராஜினாமா.. காலியான உதகை.. கடும் கொந்தளிப்பில் எடப்பாடி டீம்! – Kumudam

Spread the love

அதிமுக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அணி – வேலுமணி & சிவி சண்முகம் அணி என இரண்டாக பிரிந்து நிற்கிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இங்கே தாவுவதும் அங்கே இணைவதுமாய் கபடி ஆடிக்கொண்டுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ. மா.செ. ஆகியோரது பதவிகளை பிடுங்கி தன் ஆதரவாளர்களை நியமித் திருக்கிறார் எடப்பாடி அவரின் ஆசியில் பதவி பெற்றவர்கள், அவரவர் மாவட்டங்களில் நடத்தும் வானவேடிக்கை, சொந்த கட்சிக்குள்ளேயே அந்த மோதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. பட்டியலில் நீலகிரி மாவட்டமும் அடக்கம். அங்கு கப்பச்சி விநோத்தை நீக்கிவிட்டு மாஜி அரசு வழக்கறிஞர் பால நந்தகுமாருக்கு மாசெ. பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் உதகையில் கடந்த மே 22ம் தேதி நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கான அறிவிப்பை பால நந்தகுமார் வெளியிட்டார். தொடர்ந்து அவர், ‘என்னைக்கும் நம்ம தலைவர் எடப்பாடியார்தான். கூட்டத்துக்கு வர்றிங்க, கையெழுத்துப் போடுறீங்க என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

இச்சூழலில் திடீர் திருப்பமாக நீலகிரி மாவட்ட அதி.மு.க.வின் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், குன்னூரின் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாந்தி ராமு, உதகை நகராட்சி அதி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் இணைந்து எடப்பாடிக்கே ஷாக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் இப்படி கொத்து கொத்தாக த.வெ.கவுக்கு தாவுவதைப் பார்த்து எடப்பாடி விசுவாசிகள் கொந்தளித்து கிடக்கிறார்கள்

அதேசமயம், எடப்பாடி டீம் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேலுமணி ஆதரவு நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதும், கிளம்பிய நிர்வாகிகளுக்கு போன் போட்டு தடை போடுவதுமாக இருந்தனர். ஆனால் அதையும் தாண்டி அதிகளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதைப் பார்த்து உற்சாகமான மா.செ. பாலநந்தகுமார் மேடையில் மைக்கை பிடித்தவுடன் ஆவேசமாகிவிட்டார். எடப்பாடியாருக்கு துரோகம் பண்ணிட்டு போனவனை ஒரேடியா போயிட்டான்னு நினைச்சுக்குவோம். நீங்கள்லாம் இருக்குறதும் சாகுறதும் ஒண்ணுதான்டா. உங்களை வெச்சு கட்சி நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லடா. சலூன்ல வெட்டுறப்ப தலையிலிருந்து நாலு &*&% விழத்தான் செய்யும். நீங்க நாலு பேரு போறது அந்த நாலு & %க்கு சமம்டா. புயலுக்கு பின்னாடியும் ஆலமரம் அப்படியே நிற்கும். அதிமுக ஆலமரம்டா. ஒண்ணு சொல்லிக்கிறேன் தி.மு.க. ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்ல சட்ட ஒழுங்கு சீரழிவு காட்சிகள் மாறல. ஓட்டுப் போட்ட மக்கள் ஆறு மாசத்துல அலறப்போறாங்க இந்த கூத்தாடியின் ஆட்சி கவிழும் மீண்டும் தேர்தல் வரும். 234 தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையில் வெல்வோம். ஓடிப்போனவனோட அரசியல் வாழ்க்கை இனி அஸ்தமனம்தான் என்று விளாசித் தள்ளினார் புதிய மாசெ.

அவருக்குப் பிறகு பேசிய நிர்வாகிகளும் வேலுமணி தரப்பை கிழித்து தொங்கவிட்டனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்னு கவுன்சிலராகி, வளமான வாழ்க்கை நடத்தியவனுங்க இப்ப த.வெ.க.வில் இணைஞ்சிருக்காங்க. மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா எடப்பாடியார் போட்ட பிச்சையால் கிடைத்த கவுன்சிலர் பதவிய உதறுங்க. சாந்திராமு நன்றி மறந்து தவெகவில் இணைஞ்சிருக்கார். தேமுதிகவிலிருந்து ஓடிவந்த அவரை எம்.எல்.ஏ.வாக்கி, மாவட்ட கழக பதவிகளை கொடுத்து தேர்தலில் சீட்டும் கொடுத்து உயர்த்திவிட்டது இந்தக் கழகம்தான். ஆனால் எப்படி ஒரு நொடியில் இப்படி நன்றி மறந்துட்டு ஓட முடியுது? என்றெல்லாம் போட்டுப் பொளந்தனர்.

மாவட்டச் செயலாளர் பாலநந்தகுமார் மோசமாக விளாசித் தள்ளியது எடப்பாடிக்கு எதிராக புதிய டீம்மை உருவாக்கிய வேலுமணி அண்ட் கோவையா அல்லது த.வெ.க.வில் இணைந்தவர்களையா என்று ஒரு விவாதமே நடக்கிறது. இதுகுறித்து த.வெ.க.வில் இணைந்திருக்கும் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம். “எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டி எழுப்பிய அதிமுகவை எடப்பாடி தனது சுயநலனுக்காக தரைமட்டமாக்கிவிட்டார். தன் பதவியை காப்பாற்றுவதற்காக கட்சியை அழித்துள்ள அவரை நம்பி நின்றால் இனி பொதுவாழ்க்கையில் எந்த நல்லதும் செய்ய முடியாது. அதனால்தான் தவெகவில் இணைந்தோம். இதை அதிமுகவினர் வன்மத்தோடு விமர்சிப்பது அவர்களின் மட்டமான மனநிலையைக் காட்டுகிறது.

அ.தி.மு.க.வினரின் அவதூறுகளை மக்கள் கவனித்ததால்தான் கடந்த தேர்தலில் பலத்த அடியை கொடுத்தார்கள். அதன் பிறகும் இவர்கள் திருந்தவில்லை. பொறுத்திருந்து பாருங்கள், எதிர்வரும் இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் தவெ.கவிடம் மிக மோசமாக அதிமுக தோற்கும் நிலை எடப்பாடி டீமுக்கு ஏற்படும்” என்றார்.

நீலகிரியில் கிளம்பியுள்ள இந்த களேபர ஃபீவர் பக்கத்து மாவட்டமான கோவை அதிமு.க.வுக்கும் தொற்றியுள்ளது. இங்கே வேலுமணிக்குப் பதிலாக மாஜி மேயர் செ.ம.வேலுசாமியை மாவட்டச் செயலாளராக்கியுள்ளார் எடப்பாடி சமீபத்தில் நடந்த ஒன்றிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே வேலுமணி டீமை வறுத்து தள்ளியுள்ளனர் நிர்வாகிகள் வேலுமணி அண்ட் கோ தங்கள் தவறுகளுக்கு வருந்தி மீண்டும் எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டபோதும் மாவட்ட அளவில் இரு அணியாக பிரிந்து கிடப்பவர்கள் பழைய கசப்புகளை மறக்காமல் மீண்டும் மீண்டும் மோதும் நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் கேட்டபோது, “மாபெரும் இயக்கமான அதிமுகவில் எந்த பிளவுமில்லை. சின்ன சலசலப்புகள் அவ்வளவே. தமிழகம் எங்கள் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்” என்றார். உதகையில் மிக மோசமாக திட்டப்பட்டதால் போட்டிக் கூட்டம் போட்டு எடப்பாடி அண்ட் கோவை பொளந்துகட்ட தயாராகி வருகிறது எதிர்தரப்பு.

கண்ணாடி கூண்டுக்குள் நின்று கல் எறிகிறார்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *