கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் கொச்சி பொதுமக்கள் நேற்று பாராட்டு விழா நடத்தினர்.
கடவந்தறா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த அந்த விழாவில் நடிகர் மம்மூட்டி எதிர்பாராத விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மம்மூட்டி பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிலையிலும், அவர் வந்திருந்தது பொதுமக்களை ஆரவாரப்படுத்தியது. மேலும் நடிகர் குஞ்ஞாக்கோ போபனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் ஜி.பிரியங்கா தலைமை வகித்தார்.
முதல்வர் வி.டி.சதீசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி பேசுகையில், “நான் படித்த கல்லூரியில்தான் வி.டி.சதீசனும் படித்துள்ளார். நான் கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சினிமாவில் நடித்துள்ளேன். நடிப்பது என்பது ஒரு குறுகிய காலத்திற்குத்தான். ஆனால் உண்மையில் முதலமைச்சராக இருப்பது என்பது ஒரு பெரிய கடினமான வேலையாகும்.
வி.டி.சதீசனின் தோள்களில் பெரிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. அனைவருக்கும் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு இது. எல்லோரையும் அரவணைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களைக் கட்டுப்படுத்தி, தலைமை தாங்கி, வழிநடத்திச் செயல்பட வேண்டும்” என்றார்.

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் பேசுகையில், “மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு ஆட்சியை எதிர்பார்க்கிறேன். பொதுமக்களுக்கும் நாட்டிற்கும் புத்துணர்ச்சியையும் நன்மையையும் தரும் ஆட்சியாக இது அமையட்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசுகையில், “மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், அதனை சட்டத்தின் விதிமுறைப்படி விநியோகிப்பதும் எனது அரசாங்கத்தின் குறிக்கோள். கஜானா மக்களுடையது, அது நீதியான முறையில் விநியோகிக்கப்படும்.
வளர்ச்சி என்பது பெரிய கட்டிடங்களை எழுப்புவதுதான் என்றுதான் முன்பு கருதப்பட்டது. ஆனால் அதுவல்ல வளர்ச்சி என்பது இன்று புரிந்துவிட்டது. அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதே வளர்ச்சியாகும். அதற்கான திட்டங்கள் ஜூன் 19 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும்.

கேரளாவின் மதநல்லிணக்கம் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து அரவணைப்பதும், ஏதேனும் கஷ்டம் வரும்போது அவர்களுக்குத் துணையாக நிற்பதுமே மதநல்லிணக்கம் ஆகும்.
வகுப்புவாதத்தோடு எந்தச் சமரசமும் இல்லை. யாரும் வகுப்புவாதம் பேசக்கூடாது என்ற வலுவான நிலைப்பாடு தொடரும். இது மதச்சார்பற்ற கேரளா என்று உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும்” என்றார்.
பின்னர் வி.டி.சதீசன் தனது சொந்த தொகுதியான பறவூர் தொகுதியில் நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் கலந்துகொண்டு முதல்வர் வி.டி.சதீசனை வாழ்த்தினார்.