கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

Spread the love

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள் மற்றும் 12 புதிய தாலுக்காக்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. நீண்டகாலமாகப் பரிசீலனையில் இருந்த இந்த கோரிக்கை, மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கேரள அரசு பரிசீலித்து வரும் திட்டத்தின்படி, திரூர் மற்றும் மூவாற்றுப்புழா ஆகிய பகுதிகள் புதிய மாவட்டங்களின் தலைமையிடங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நில வருவாய் ஆணையர் தலைமையிலான உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டு, மாவட்ட உருவாக்கம் மற்றும் அதற்கான நிதித் தேவைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மலப்புறம் மாவட்டத்தைப் பிரித்து, திரூரை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது. 47 லட்சம் மக்கள் தொகையையும், 3,550 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட மலப்புறம் மாவட்டம், தற்போது கேரள மாநிலத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது. புதிய மாவட்டத்தில் தானூர், திரூரங்காடி, பொன்னானி ஆகிய தாலுக்காக்கள் இணைக்கப்படும். நிர்வாகத் தேவையைப் பொறுத்து பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கி மூவாற்றுப்புழாவை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் மூவாற்றுப்புழா, கோதமங்கலம், பிறவம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பெரும்பாவூரின் சில பகுதிகளும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.​

புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என்பது அரசியல் கட்சிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. மலப்புறம் மாவட்டத்தைப் பிரிப்பது முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையாகவும், மூவாற்றுப்புழா மாவட்டம் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலத் திட்டமாகவும் இருந்துவருகிறது. 1982-ல் அப்போதைய முதல்வர் கே.கருணாகரன் மூவாற்றுப்புழா மாவட்டம் குறித்து அறிவித்திருந்தாலும், பல்வேறு அரசியல் சூழல்களால் அது நடைமுறைக்கு வரவில்லை. 1969-ம் ஆண்டின் மக்கள் தொகையை கணக்கிடும்போது, அதைவிட மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் தொகை மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பதால், நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரிப்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் நிதி ஒதுக்கீடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. புதிய மாவட்டத்திற்குத் தேவையான ஆட்சியர் அலுவலகம், சிவில் ஸ்டேஷன், எஸ்.பி அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு அலுவலகங்களை அமைப்பதற்குப் பெரும் நிதி தேவைப்படும். மேலும், புதிய அலுவலகங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களை உருவாக்குவதும் சவாலான காரியம். இருந்தபோதிலும், மக்கள் எளிதாக அரசு சேவைகளைப் பெறுவதை உறுதி செய்ய இந்த நிதி ஒதுக்கீடு அவசியம் என்று அரசு கருதுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *