India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் உள்ளிட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த கப்பல்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
மத்திய அரசு சார்பில் நம் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின், ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் 3 புதிய கப்பல்களை தயாரித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் சார்பில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் உள்ளிட்ட அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ஐஎன்ஸெ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய் மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் உள்ளிட்ட அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஐஎன்எஸ் துனகிரி போர்க் கப்பலானது, எதிரி நாடுகளின் ரேடார்களின் கண்களில் படாமல் கடலில் மறைந்து தாக்கும். இந்த போர்க்கப்பல் அட்வான்ஸ்ட் ஸ்டெல்த் வகையை சேர்ந்தது. பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்த போர்க்கப்பலில் வைத்து எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும்.
அதேபோல், ஐஎன்எஸ் அக்ராய் கப்பலானது கடலில் இருக்கும் அச்சுறுத்தலை கண்டுபிடித்து அழிக்கும் திறன் கொண்டது. கடலுக்கடியில் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘அர்னாலா கிளாஸ்’ எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும்.
மேலும் ஐஎன்எஸ் சன்ஷோதக் கப்பலானது ஆய்வு கப்பலாகும். இது கடலாய்வுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 4-வது பெரிய சர்வே கப்பல் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்கடல் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளை துல்லியமாக வரைபடம் தயாரிக்க இந்தக் கப்பல் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.