‘கேரள மாநில கடன் ரூ.5.07 லட்சம் கோடி; ஓய்வூதிய வயதை உயர்த்த வேண்டும்’ வெள்ளை அறிக்கையில் பரிந்துரை!

Spread the love

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நிதித்துறையைக் கவனிக்கும் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் மற்றும் கே.எம்.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் பொருளாதார வல்லுநர்கள் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். ​மாநிலத்தின் பொருளாதார நிலையும் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய இடதுசாரி அரசு கொண்டு வந்த கிஃபி (KIIFB) கட்டமைப்பு பெரும் கடன்பொறுப்பாக மாறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை அதிகரித்து 5.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், மாநில வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது. சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வளர்ச்சிச் செலவுகளை வெட்டிச் சுருக்கும் குறுக்குவழிதான் மாநிலத்தைச் சீரழித்து வருவதாகவும், அகவிலைப்படி (DA) வழங்காமல் ஒத்திவைத்ததால் ஏற்பட்ட நிலுவைத் தொகைதான் பெருகிப் பெருகி 48,733 கோடியை எட்டியுள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மாநிலம் ஓராண்டில் வாங்கும் மொத்தக் கடனை விடவும் அதிகமாகும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் 78,851 கோடி ரூபாயாக உள்ள நிலையில், தேசிய அளவில் வேலையின்மை விகிதம் வெறும் 4.5 விழுக்காடாக இருக்கும்போது, கேரளாவில் அது 20.7 விழுக்காட்டை எட்டியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, செலவைக் குறைப்பதால் மட்டும் பயனில்லை என்றும், வருவாயைப் பெருக்க புதிய வழிகளைத் தேடுவதோடு, “ஒருங்கிணைந்த நிதி’ ஒன்றை உருவாக்கிப் பொறுப்புகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வெள்ளை அறிக்கை வலியுறுத்துகிறது.

முன்னாள் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால்

முன்னாள் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால்

நிதிச் சீர்திருத்தங்கள் குறித்து இந்த அறிக்கையில் பல்வேறு முக்கியப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டப்பூர்வ ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வுபெறும் வயதை 56-லிருந்து உயர்த்தினால் 6,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக உள்ளது. தற்போது மாநிலச் செலவினங்களின் முக்கால்வாசிப் பகுதியைச் சம்பளமும் ஓய்வூதியமும்தான் ஆக்கிரமிக்கின்றன. மேலும், நலத்திட்ட ஓய்வூதிய விநியோகம் பெரும்பாலான இடங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நேரடியாகக் கொண்டு போய்க் கொடுக்கப்பட்டு வருவதை மாற்றி, பட்டியலிடப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-ஐ விரிவுபடுத்த முன்னணி முகமையின் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், கே.எஸ்.இ.பி, வாட்டர் அத்தாரிட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி ஆகியவற்றை மேம்படுத்த சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு, கே-டிஸ்க், கே-ரெயில் ஆகியவற்றின் பலன்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. திட்டக் குழுவை மறுசீரமைக்கவும், தலைமைச் செயலகத்தில் கோப்பு நேர மேலாண்மை முறையைக் கொண்டு வரவும், கன்சல்டன்சி ஒப்பந்தங்களை ஆராயவும், மத்திய அரசுடன் நல்லுறவை மீண்டும் நிலைநாட்டவும் இந்த வெள்ளை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *