இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.
அணியின் ஆட்டம் ‘கேவலமாக’ இருந்ததாகவும், இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கேவலமான ஆட்டம்!
போட்டிக்குப் பிறகான நேர்காணலில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தோல்வியின் வலியை மறைக்க முடியாமல் தவித்தார். “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ‘கேவலம்’ என்பதை விட மோசமான ஒரு வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியவில்லை. இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முதலில், இந்தத் தோல்வியை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்டு, எங்கே தவறு செய்தோம் என்பதை ஆராய மீண்டும் திட்டமிடும் இடத்திற்கே (drawing board) செல்ல வேண்டும்,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
பேட்டிங்கில் படுமோசம்!
தோல்விக்கான முக்கிய காரணமாக பேட்டிங் சரிவையே ஷ்ரேயாஸ் சுட்டிக்காட்டினார். “200 ரன்கள் இலக்கை துரத்தும்போது, உங்கள் இன்னிங்ஸை எப்படி கட்டமைக்கப் போகிறீர்கள் என்பதற்கு ஒரு தெளிவான திட்டம் வேண்டும். ஆனால், நாங்கள் பவர் பிளேவிலேயே நான்கு (ஐந்து) விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுவே எதிரணிக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது.
ஆட்டத்தின் மொமென்டத்தை நாங்கள் அங்கேயே இழந்துவிட்டோம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்,” என்றார். பேட்டிங்கில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அணி பின்தங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பந்துவீச்சிலும் கோட்டை விட்டோம்!
பேட்டிங் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் அணி சொதப்பியதாக ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். “இந்த ஆடுகளம் 200 ரன்கள் எடுக்கும் அளவுக்கு எளிதானது என்று நான் நினைக்கவில்லை. இங்கு பந்துவீச்சாளர்களுக்கு, குறிப்பாக ‘ஹார்ட் லென்த்’ பந்துகள் நன்றாக உதவியது. ஆனால், நாங்கள் அந்த யுக்தியைப் போதுமான அளவு செயல்படுத்தவில்லை. திட்டங்களை வகுப்பது எளிது, ஆனால் களத்தில் அதைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் நாங்கள் மோசமாகச் செயல்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு வீரரும் பொறுப்பேற்க வேண்டும்!
அணியின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், “நாங்கள் மிக மோசமான கிரிக்கெட்டை ஆடியுள்ளோம் என்பது உண்மை. ஆனால், இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு வீரரும் அணிக்கு எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவது, எப்படி மொமென்டத்தை உருவாக்குவது என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும். போட்டிகளை வெல்வதற்கான பொறுப்பை ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் உணர வேண்டும். இந்தத் தோல்வியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவதற்கான சிறந்த வாய்ப்பு இது,” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.