தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி-சேலை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தைத் தொடர்கிறது. கடந்த வாரம் இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் அரசாணை
அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர் உடன் 1,77,64,000 சேலைகளும் சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் 1,77,22000 புதிய வடிவமைப்பில் வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யும் வகையில் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக 642 கோடி ரூபாய் திட்டத்தில் முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்திருந்தது.
தவெக அரசின் இந்த அரசாணையை வரவேற்று தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.