கையில் எவர்சில்வர் டம்ளரை காட்டி.. என்னங்க பிரேமலதா இப்படி பேசிட்டாங்களே.. நோட்ஸ் எடுத்த விஜய்! | Don’t Use Glass in Assembly!” Premalatha’s Eco-Friendly Tea Cup Proposal Makes CM Vijay Smile

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல் குறித்தும் மற்றும் உறுப்பினர்களின் வசதிகள் குறித்தும் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பேசியது கவனம் பெற்றது. தேநீர் வழங்கும் கோப்பைகள் தொடர்பாக தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்தின் சுவாரசியமான உரையாடல் அவையை அதிர வைத்தது.

சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எவர்சில்வர் கப்புகளுக்குப் பதிலாக கண்ணாடி அல்லது குடுவைகளைப் பயன்படுத்தலாம் என்று பிரேமலதா யோசனை தெரிவிக்க, அதற்கு அவை கொடுத்த ரியாக்சன் கவனம் பெற்றது.

எவர்சில்வர் கப்புகளுக்குப் பதிலாக கண்ணாடி டம்ளர்: பிரேமலதா யோசனை

சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளின் போது, தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் எழுந்து அவையின் மாண்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்துப் பேசினார்.

“சபாநாயகர் அவர்களே, நமது தமிழக சட்டசபையில் உறுப்பினர்களுக்குத் தேநீர் மற்றும் காபி வழங்கும் போது இன்னும் பழைய காலத்து எவர்சில்வர் (Ever Silver) கப்புகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் இவ்வளவு நவீனமடைந்து, டிஜிட்டல் மயமாகி வளர்ந்து வரும் சூழலில், இதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.

Don t Use Glass in Assembly Premalatha s Eco-Friendly Tea Cup Proposal Makes CM Vijay Smile

மேலும் பேசிய அவர், “எவர்சில்வர் கப்புகளுக்குப் பதிலாக, அழகிய கண்ணாடி (Glass) டம்ளர்கள் அல்லது மண்ணால் செய்யப்பட்ட சிறிய குடுவைகளை (Small Pots) அறிமுகப்படுத்தலாம். இது பார்ப்பதற்கும் நவீனமாக இருக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, எவர்சில்வர் கப்புகளைத் தேடி எடுத்து சுத்தம் செய்யும் ஊழியர்களின் வேலைப்பளுவும், சபாநாயகரின் நிர்வாக வேலைகளும் இதன் மூலம் கணிசமாகக் குறையும்” என்று சுட்டிக்காட்டினார்.

உற்று கவனித்துக் குறிப்பு எடுத்த முதல்வர் விஜய்

பிரேமலதா விஜயகாந்த் இந்த எளிய ஆனால் அவசியமான நிர்வாக மேம்பாட்டு யோசனையை முன்வைத்த போது, அவையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதனை மிகவும் உற்று கவனித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மாற்றத்தின் மீதான பிரேமலதாவின் வாதத்தை ரசித்த முதல்வர் விஜய், உடனடியாகத் தனது மேஜையில் இருந்த டைரியை எடுத்து, அந்த யோசனையை முக்கியக் குறிப்பாக (Taking Notes) எழுதி வைத்துக் கொண்டார். முதல்வரே தனது கருத்தைக் குறித்துக் கொள்வதைக் கண்டு தேமுதிக உறுப்பினர்கள் உற்சாகமடைந்தனர்.

குறுக்கிட்ட ஓபிஎஸ்: அவையை அதிரவைத்த ‘பகீர்’ கவுண்டர்!

பிரேமலதா பேசி முடித்த அடுத்த கணமே, மூத்த அரசியல் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் (OPS) சிரித்துக் கொண்டே திடீரென எழுந்து நின்றார். சபாநாயகரின் அனுமதியோடு பேசத் தொடங்கிய அவர், பிரேமலதாவின் சுற்றுச்சூழல் ஆர்வத்தைப் பாராட்டிவிட்டு, அப்படியே சட்டமன்றத்தின் யதார்த்த பக்கத்திற்கு டைவிங் அடித்தார்.

“சபாநாயகர் அவர்களே… சகோதரி பிரேமலதா அவர்கள் சொன்னது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அவையின் எதார்த்த சூழ்நிலையை நாம் யோசிக்க வேண்டும். காரசாரமான விவாதங்கள் நடக்கும் போது, எவர் சில்வர் இருப்பதால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படுவதில்லை!” என்று ஓபிஎஸ் ஆரம்பிக்கவே அவையில் லேசான புன்னகை அரும்பியது.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “அதை விடுத்துவிட்டு, அவையில் கண்ணாடி டம்ளர்களையோ அல்லது கண்ணாடி பாட்டில்களையோ புழக்கத்தில் விட்டால்… இங்கே எப்போது யாருக்குக் கோபம் வரும் என்றே தெரியாது. ஆத்திரத்தில் யாராவது ஒருவர் மேல் ஒருவர் கண்ணாடி பாட்டில்களைத் தூக்கி வீசி எறிந்து கொண்டால்,என்னாகும்.?” என்று மிக சீரியஸான முகபாவனையுடன் டைமிங் கவுண்டர் கொடுத்தார்.

குலுங்கி குலுங்கிச் சிரித்த முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்

அரசியல் களத்தில் அவையில் நடக்கும் மோதல்களை மனதில் வைத்து ஓபிஎஸ் அடித்த இந்த நக்கல் கமெண்ட்டைக் கேட்டதும், அவையிலிருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பு எம்.எல்.ஏக்களும் கைகளைத் தட்டி பலமாகச் சிரிக்கத் தொடங்கினர்.

குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் விஜய்யும் ஓபிஎஸ்-ன் இந்த எதிர்பாராத கலகலப்பான கவுண்டரைக் கேட்டு வாய்விட்டு, குலுங்கி குலுங்கிச் சிரித்தார். காரசாரமான விவாதங்களுக்கு இடையே, தேநீர் கப்பைச் சுற்றி சுழன்ற இந்த ஜாலியான விவாதம் இன்றைய சட்டசபை நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *