
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த சில ஆண்டுகளாக ‘கைலாசா’ என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அந்த நாடு உண்மையில் எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவலை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கைலாசாவின் தூதரக முகவரி எனக் கூறி புதிய தகவல் ஒன்றை நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில், இந்துக்களுக்காக தனி நாடாக ‘கைலாசா’ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தது பெரும் கவனத்தை பெற்றது.
கைலாசாவுக்கு தனிக்கொடி, நாணயம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருப்பதாக நித்யானந்தா தரப்பில் கூறப்பட்டதுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்ததாக கூறப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின. இருப்பினும், கைலாசா அமைந்துள்ள இடம் குறித்த கேள்விக்கு மட்டும் நீண்ட காலமாக எந்த நேரடியான பதிலும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கைலாசாவின் தூதரகம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி-பிசாவ் பகுதியில் செயல்படுவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக, அமில்கர் கேப்ரல் அவென்யூ, கினி-பிசாவ் என்ற முகவரியை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைலாசாவின் தூதரகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாகவும், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் கைலாசாவில் தஞ்சம் அடையலாம் என்றும் அந்த வீடியோவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினி-பிசாவ், பரப்பளவில் சிறிய நாடுகளில் ஒன்றாகும். அந்த நாட்டில் கைலாசாவின் தூதரகம் இருப்பதாக நித்யானந்தா கூறியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் உள்ள கைலாச தியான பீடம் தொடர்பான நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்க இருப்பதாகவும், அதற்கான பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது தரப்பில் புதுச்சேரி அரசிடம் மனு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சூழலிலேயே கைலாசாவின் தூதரக முகவரி எனக் கூறி நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோ கவனம் பெற்றுள்ளது.