கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! | West Bengal Political Crisis: BJP Closes Doors for TMC Rebels Amid Mass Defection Speculations

Spread the love

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்க அரசியல் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. மம்தாவுக்கு எதிராகக் கலகம் செய்த திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அதில் மிகப் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. பாஜக அவர்களைச் சேர்க்கப் போவதில்லையாம். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மேற்கு வங்க அரசியலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், பிளவையும் சந்தித்து வருகிறது. இந்தக் குழப்பமான சூழலில் அங்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது. மம்தாவுக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் பாஜகவில் இணையத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பாஜகவின் கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

West Bengal Political Crisis

கதவுகள் மூடப்பட்டன

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர், “இவர்கள் (திரிணாமுல் அதிருப்தியாளர்கள்) பாஜகவில் இணைய விரும்புகிறார்கள், ஆனால் பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுள்ளன” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது என்றும், அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

என்ன நடக்கிறது

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவே இந்த கிளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவிடம் திரிணாமுல் கட்சி தோல்வி அடைந்ததோடு, மம்தா பானர்ஜியே தனது சொந்த தொகுதியான பவானிபூரில் தோல்வி அடைந்தார். அதன் பிறகு கட்சிக்குள் குழப்பம் வெடித்தது.

மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். கட்சியில் மூத்த தலைவர்களின் கருத்துக்கள் மதிக்கப்படுவதில்லை என்றும், அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் பல தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூத்த தலைவர்கள்

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், 6 முறை எம்.பி-யுமான சுதீப் பந்தோபாத்யாய், நேற்று சனிக்கிழமை டெல்லியில் பாஜக மூத்த தலைவர் பூபேந்தர் யாதவை சந்தித்துப் பேசினார். அவருடன் அதிருப்தி எம்.பி சதாப்தி ராயும் சென்றிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே, சுதீப் பந்தோபாத்யாய் வகித்து வந்த வட கொல்கத்தா மாவட்டத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக குணால் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாயோனி கோஷ் நீக்கப்பட்டு, அர்னாப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மானஸ் ரஞ்சன் பூனியா சனிக்கிழமை இரவு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது மம்தா பானர்ஜிக்கு மற்றுமொரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

திரிணாமுல் பலம்

லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸிற்கு மொத்தம் 28 எம்பிக்கள் உள்ளனர். இதில் 19 எம்பிக்கள் தனியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மே 18ம் தேதியிட்ட கடிதத்தில் 19 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் திங்கள்கிழமை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தங்களைத் தனிக்குழுவாக அங்கீகரிக்கக் கோர உள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபையில் கட்சியின் 80 எம்.எல்.ஏ-க்களில் 64 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி, சோவன்தேப் சட்டோபாத்யாயை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த முடிவுக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மாநிலங்களவையை பொறுத்தவரை சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததால், கட்சியின் பலம் 13-லிருந்து 10-ஆகக் குறைந்துள்ளது.

ஆபரேஷன் தாமரை

இந்தக் குழப்பங்கள் குறித்துப் பேசிய திரிணாமுல் எம்.பி சௌகதா ராய், “இது பாஜகவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தின் ஒரு பகுதி. கொள்கை உறுதி இல்லாதவர்களை பாஜக மிரட்டியும், ஆசை காட்டியும் இழுக்கிறது. அவர்கள் தனிப் பிரிவாகச் செயல்படப் போவதாகக் கூறுகிறார்கள். அவர்களை பாஜக சேர்த்துக் கொள்ளுமா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

அடுத்தகட்டமாக அதிருப்தி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியைச் சந்திக்க உள்ளனர். திங்கள்கிழமை சபாநாயகரின் முடிவைப் பொறுத்தே திரிணாமுல் காங்கிரஸின் எதிர்காலம் அமையும். மொத்தத்தில், சொந்த கட்சியில் இருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார். அதேநேரம் பாஜகவும் அதிருப்தியாளர்களைச் சேர்க்கப் போவதில்லை எனச் சொல்லியுள்ளதால் ஒரு சுவாரசியமான அரசியல் களம் உருவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *