“ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம வண்டியை ஓட்டணும். ஆனா, முன்ன மாதிரி இப்ப நிம்மதியா தொழில் பண்ண முடியலை” என்று பெருமூச்சுடன் கூறுகிறார் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர் சத்தியமூர்த்தி.
அவரது பேச்சில் இரண்டு மாத கால முடக்கத்தின் கவலையும், கடன்களும், வறுமையின் சாயலும் இருந்தாலும், கண்களில் ஒரு புதிய மீன்பிடி சீசனுக்கான எதிர்பார்ப்பு ஒளிர்கிறது.
60 நாள் ‘லாக்டவுன்’ நிறைவு:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை, 60 நாட்களுக்குக் கடலில் மீன் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் இன்றுடன் (ஜூன் 14) முடிவுக்கு வருகிறது.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய கடற்கரை கிராமங்களான கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகு மீன்பிடி தளங்களில் ஒரு பெரிய பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.
அங்குள்ள மீன்பிடி தளத்தில் 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டு, கடலுக்குப் பாயத் தயாராக உள்ளன. ஒருபுறம் படகுகளில் டீசலை நிரப்புவது, மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க டன் கணக்கில் ஐஸ் கட்டிகளை ஏற்றுவது, மறுபுறம் கிழிந்த வலைகளைத் தையல் போட்டுச் சரிபார்ப்பது என மீனவர்கள் மத்தியில் அனல் பறக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
ஒரு விசைப்படகிற்கு 4 முதல் 5 பேர் வீதம், இந்த ஒரு மாவட்டத்திலேயே சுமார் 2,000 முதல் 3,000 மீனவர்கள் நேரடியாக கடலுக்குள் செல்லக் காத்திருக்கிறார்கள்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை ) நள்ளிரவு கடலுக்குள் பாயும் இந்த விசைப்படகுகள், ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு செவ்வாய்க்கிழமைதான் கரை திரும்பும்.
இந்த 60 நாட்கள் தடைக்கால வாழ்க்கை மீனவர்களுக்கு அத்தனை எளிதானது அல்ல. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே வறுமையோடு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது என்ற மீனவர் சத்தியமூர்த்தியிடம் விரிவாகப் பேசினோம்.

“தேர்தல் தந்த ‘அட்வான்ஸ்’ நிவாரணம்; ஆனால், வாக்குறுதி என்னாச்சு?”
“தடைக்காலத்துல நாங்க முழுசா வறுமையிலதான் தவிப்போம். குடும்பச் செலவு, சாப்பாடு, பிள்ளைகள் படிப்புனு எல்லாமே முடங்கிடும். வழக்கமா அரசாங்கம் தர்ற நிவாரணத் தொகை ரூ.6,000-லிருந்து, திமுக அரசாங்கத்துல ரூ.8,000 ஆக உயர்த்திக் கொடுத்தாங்க.
ஆனால், விஜய்யோட தவெக அரசு தேர்தல் வாக்குறுதியா மீனவர்களுக்குத் தடைக்கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் தர்றதா சொல்லியிருந்தாங்க. ஆனால் அதைப் பத்தி அதிகாரிகள் யாரும் இன்னும் வாயைத் திறக்கலை.

இந்த வருஷம் தேர்தல் வந்ததால, எங்களோட தடைக்கால நிவாரணத் தொகையைக் கடந்த திமுக அரசாங்கம் முன்கூட்டியே எங்க அக்கவுண்ட்ல போட்டுட்டாங்க. அதுமட்டும் இல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கான தொகையையும் சேர்த்து தேர்தல் வர்றதுக்கு முன்னாடியே கொடுத்ததால, இந்த ரெண்டு மாசத்தை ஓரளவுக்குக் கடனை உடனை வாங்கி ஓட்டிட்டோம்” என்கிறார் சற்று நிம்மதியுடன்.
“உயரும் டீசல் விலை… கமிஷன் அடிக்கும் இடைத்தரகர்கள்; மீனவர்களின் குமுறல்!
“அரசு கொடுத்த நிவாரணம் ஒருபுறம் இருந்தாலும், தடைக்காலத்தின் முடிவில் படகுகளைப் பழுதுபார்க்கும் செலவு, எஞ்சின் வேலை, வலைகள் வாங்குவது எனப் பல்லாயிரக்கணக்கில் மீனவர்களுக்குப் பெரிய அளவில் தொகை தேவைப்படுகிறது.
இதற்காகப் பலரிடம் கடன் வாங்கித்தான் இப்போது கடலுக்குக் கிளம்புகிறோம். எல்லாவற்றையும் விடப் பெரிய இடியாக எங்களின் தலையில் விழுவது டீசல் விலையேற்றம்தான்.

எங்களுக்குப் போக்குவரத்து செலவு ரொம்ப அதிகமாயிடுச்சு. டீசல் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்துல ஏறிக்கிட்டே போகுது. படகுகளுக்கான டீசல் மானியம் இப்போதைக்கு எவ்வளவு தர்றாங்கங்கிற நிலவரம் தெரியல.
ஜூன் 15-ஆம் தேதிக்கு மேல படகுகள் கடலுக்குப் போயிட்டு வந்த பிறகுதான் மானியத்தோட விலை நிலவரம் என்னன்னு தெரியவரும். நாங்க உயிரைப் பணயம் வச்சு, இரவு பகலா கஷ்டப்பட்டு ஆழ்கடலுக்குப் போய் மீன் பிடிச்சிட்டு வர்றோம். ஆனா, எங்க உழைப்புக்கேத்த விலை எங்களுக்குக் கிடைக்கிறது இல்லை.
வெளியூர்ல, வெளி மார்க்கெட்ல ஒரு கிலோ மீன் 500 ரூபாய், 600 ரூபாய்னு விக்கிறாங்க. ஆனால், எங்ககிட்ட ரொம்பக் கம்மியான விலைக்குத்தான் இடைத்தரகர்கள் ஏலம் எடுத்துட்டுப் போறாங்க. அவங்க வைக்கிறதுதான் விலைங்கிற நிலைமை இருக்கு. நாங்க கஷ்டப்பட்டுப் பிடிக்கிற மீனுக்கு எங்களுக்கு உரிய லாபம் கிடைக்கிறது இல்லை.
இந்த விலைவாசி மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைக்கு ஒரே ஒரு நிரந்தரத் தீர்வுதான் இருக்கு. அரசாங்கமே நேரடியாகக் களத்துல இறங்கி மீனவர்கள்கிட்ட இருந்து மீன்களைக் கொள்முதல் செய்யணும். அரசு ஒரு நிலையான நிரந்தர விலையை நிர்ணயம் செஞ்சு நேரடியா வாங்குனா, நடுவுல இருக்குற இடைத்தரகர்களின் கமிஷன் தொல்லை ஒழியும்; எங்களுக்கும் நியாயமான விலை தடையின்றி நேரடியாகக் கிடைக்கும்,” என்று வெடித்தார்.
கவலைகள், கழுத்தை நெரிக்கும் கடன்கள், ஏறிக்கொண்டே போகும் டீசல் விலை எனப் பல சவால்கள் இவர்களைத் துரத்தினாலும், கடலுக்குள் சென்றுவிட்டால் இவர்களின் உலகம் மாறிவிடுகிறது.

படகுகளில் தேசியக் கொடியை ஏற்றி, மாலை நேர வழிபாடுகளை முடித்துவிட்டு, ஆழ்கடலை நோக்கிப் பாயத் தயாராகிவிட்டார்கள் இந்தக் கடலோரக் குடிகள்.
“கரையை நம்பினால்தான் ஏமாற்றம்… கடலை நம்பினால் அது ஒருபோதும் கைவிடாது” என்ற ஒற்றை நம்பிக்கையோடு அலைகளை நோக்கிக் கிளம்பக் காத்திருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரையோரக் கிராம மீனவர்கள்…