சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். நால்வரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். கோகுல் மற்றும் சிறுவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சிறுவர்கள் கோகுலை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்ப முயற்சி செய்த நிலையில், விபத்தால் வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததுள்ளனர். உள்ளுர் மக்களின் உதவியுடன் 3 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையில் ஈடுபட்டதைக் கண்டறிந்துள்ளனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட கோகுலின் உடலை மீட்ட காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் நிலையில், கோகுலை கொலை செய்ததை சிறுவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், “சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் என மூன்று பேரும் மது அருந்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வந்த கோகுலும் இவர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்திருக்கிறார். நட்புறவில் கோகுல் ஆதிக்கம் செலுத்துவதைப் பிடிக்காத 3 சிறுவர்களும் சேர்ந்து கோகுலை கொடூரமாக கற்கள், கட்டையால் தாக்கியதுடன் கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள். அந்தக் கொடூரத்தை செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.