`துரோகம் செய்த சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு தூக்குங்க!’ – விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல்

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகன் தலைமையில், அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகத்திற்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் சி.வி.சண்முகத்தின் சுயநலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு சிவி.சண்முகம்தான் பொறுப்பேற்க வேண்டும். அ.தி.மு.க என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதில் பல அணிகள் எல்லாம் கிடையாது. எப்போதும் அது ஒரே அணிதான். சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களின் சுயநலம் மற்றும் பதவி ஆசையாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தாலும்தான் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு த.வெ.க-விற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

விழுப்புரம் அதிமுக

விழுப்புரம் அதிமுக

அ.தி.மு.க-வில் பதவி சுகத்தையும், பணத்தையும் சம்பாதித்துவிட்டு கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்களால் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது. விரைவில் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டால், பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சிவி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்யும் சிவி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கண்டிக்கிறோம். சுனாமி போல வந்த த.வெ.க ஆட்சி, அதே சுனாமி போலவே கலைந்து விடும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருப்போம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *