ராஜ்குமார் ராஜ்பார், கடந்த ஆண்டு மே 30ம் தேதி காஜிபூரில் தனது மரணத்தை போலியாக அரங்கேற்ற, செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ஒரு திட்டத்தை வகுத்தார். தகன மேடையில் உடல் கிடப்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட படம் பயன்படுத்தப்பட்டது. மேலும், மனித உடலுக்குப் பதிலாக ஓர் ஆடு தகனம் செய்யப்பட்டது.
மரணம் உண்மையானது என்று நம்பவைப்பதற்காக, இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் நடப்பது போன்ற புகைப்படங்களும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுப் குமார் இது குறித்து கூறுகையில், “12-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத ராஜ்குமார் ராஜ்பர், பங்குச் சந்தை வர்த்தகராகப் பணியாற்றி வந்தார். அவர் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய நபர்களிடம், பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி வசூலித்திருந்தார்.
ஒரு கொலை வழக்கில் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும், வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கவும், அவர் தனது மரணத்தை ஒரு நாடகமாகத் திட்டமிட்டார்”‘ என்று தெரிவித்தார்.