கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆனது? அமைச்சர் சொன்ன தகவல் ! – Kumudam

Spread the love

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி :

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தவெகவைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வி.எஸ். பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு :

மருத்துவமனை அறிக்கையில், மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபுவுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் சுவாச உதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

வி.எஸ். பாபுவை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் :

இந்த நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் மரிய வில்சன், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வி.எஸ். பாபு தற்போது நலமாக உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடல்நிலை தொடர்ந்து தேறி வருகிறது. அவருக்கு ஏற்பட்டிருந்த சளி பிரச்னையும் தற்போது குறைந்துள்ளது. என்னிடம் நன்றாக பேசினார். அனைவரது நலன் குறித்தும் விசாரித்தார்” என்று தெரிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் வி.எஸ். பாபுவிடம் நலம் விசாரித்ததாகவும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி :

கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ். பாபு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *