கொழிஞ்சிவாடியில் வாக்கு பதிவு நிறுத்தம்! மூதாட்டியை சத்தியாபாமாவுக்கு வாக்களிக்க வைத்ததாக புகார் | Dharapuram by poll 2026: Voting halted in booth number 137 Kozhanjipadi

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: தாராபுரம் கொழிஞ்சிவாடி 137 ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரியிடம் அதிமுக, திமுக முகவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் வென்றனர்.

by poll 2026 maduranthagam dharapuram 2026

இந்த நிலையில் தேர்தல் நடந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தாராபுரத்தில் 320 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு மொத்தம் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,07,285, பெண் வாக்காளர்கள் 1,16,013 ஆவர்.

இந்த தொகுதியில் காலை முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றார். அப்போது தவெக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் தற்போது 11 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் 37.28 சதவீதம் ஆகும். இது கடந்த சட்டசபை தேர்தலை விட 5.17 சதவீதம் குறைவு. கடந்த தேர்தலில் இந்த 11 மணி வாக்கில் 42.45 சதவீதம் அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி 137 ஆவது வாக்குச் சாவடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. இந்த வாக்குச் சாவடிக்கு 72 வயதுடைய மூதாட்டி வாக்களிக்க வந்தார்.

அப்போது அவருக்கு வாக்களிக்க தெரியாததால் தேர்தல் பணி செய்ய வந்த ஊழியரிடம் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். எப்படி பொத்தானை அழுத்துவது என கேட்டாராம். அப்போது அந்த ஊழியர், அந்த மூதாட்டியை தவெகவுக்கு வாக்களிக்க வைத்தாராம். இதை அறிந்த திமுக, அதிமுக பூத் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஒன்றரை மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஊழியரிடமும் மூதாட்டியிடமும் விசாரணை செய்து விவிபாட் இயந்திரத்தையும் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து வாக்குப் பதிவு தொடங்கியது.

அது போல் கோட்டப்புலிப்பாளையம் பகுதியிலும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. அங்கு வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *