வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
விடுமுறைக்கு அவர் தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்டம், குரங்கணி மலை உச்சியில் உள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா வந்தார். கேரளா மாநிலம் சூரிய நெல்லிக்கு அருகில் உள்ளது இந்தக் கொழுக்கு மலை.
மேகங்களுக்கிடையில் சூரியன் உதிப்பதை நேருக்கு நேராகப் பார்க்க முடியும் என்பதால் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்களும் இங்கு வருகை புரிகின்றனர். நேற்று முந்தினம் இரவு சூரியநெல்லிக்கு வந்த பரத்தும் அவருடைய நண்பர்களும் இரவு தங்கி விட்டு காலையில் ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றனர்.
நேற்று அதிகாலையில் அவர் தனது நண்பர்களுடன் சூரியநல்லியில் இருந்து ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றார். காலை 6 மணியளவில் கொழுக்குமலையில் சிங்கப்பாறை என்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தி சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.
பரத் தனது நண்பர்களுடன் சூரிய உதயத்தைப் பார்த்து கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் பக்கத்தில் உள்ள பள்ளமான பகுதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீரென பரத் அங்குள்ள சுமார் 400 அடி பள்ளத்தை நோக்கி குதித்தார். அதைச் சற்றும் எதிர்பாராத அவருடைய நண்பர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து கேரள மாநில போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே கேரள வனத்துறையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த பரத் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பரத் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இரண்டு நாள்களுக்கு கொழுக்குமலைக்குச் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர் பரத் தற்கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.