கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? இந்த 15:15:15 ஃபார்முலாவை தெரிந்து கொள்ளுங்கள்!

Spread the love

இன்றைக்குப் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்களின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,000 – 25,000 ரூபாயாக இருக்கிறது. இந்தத் தொகை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சராசரியாக சுமார் ரூ.25,000 – 35,000 ரூபாயாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நாம் இளைஞர்களின் ஆரம்ப சம்பளம் ரூ.25,000 என எடுத்துக்கொள்வோம்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் இளைஞர்களின் சராசரி வயது 25 என வைத்துக்கொள்வோம். இந்த ரூ.25,000 மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு 40 வயதில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/

ரூ.1 கோடி என்கிற இலக்கை அடைய குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சேமித்து வர வேண்டியிருக்கும். பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பொதுவான விதிமுறை (Thumb Rule) ஒன்று உள்ளது. அதாவது, 15:15:15 ஆகும். ஒருவர் மாதம்தோறும் 15,000 ரூபாயை 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அவருக்கு அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால், 15 ஆண்டு முடிவில் ரூ.1 கோடி சேர்ந்திருக்கும். இளைஞர்கள் இன்றைய தேதியில் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும்போது அல்லது சம்பாதிக்கும்போது மாதம் அதிகபட்சம் 5,000 ரூபாய்தான் சேமிக்க முடியும். காரணம்,

தங்கி இருக்கும் இடத்தின் வாடகை, போக்குவரத்துச் செலவுகள், சாப்பாட்டுச் செலவுகள் போன்றவை போக சுமாராக இவ்வளவுதான் சேமிக்க முடியும்.

நிதிச் சுதந்திரம், நேர சுதந்திரம்…

இன்றைக்கு நிதிச் சுதந்திரம் (Financial Freedom) பற்றி இளைஞர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கூட, நேர சுதந்திரம் (Time Freedom) பற்றியும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்னுடைய தந்தையை எடுத்துக்கொண்டால், அவர் தன் 60 வயது வரையில் வேலை பார்த்து பணி ஓய்வுப் பெற்றவர் ஆவார். அவருக்கு நிதிச் சுதந்திரம் மட்டுமே முக்கியமானதாக இருந்தது. நேர சுதந்திரம் என்பதை அவர் பணி ஓய்வுக்காலத்துக்குப் பிறகுதான் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு மில்லேனியல்ஸ் (Millennials) என்கிற இளைஞர்கள், 1981 முதல் 1996-ம் ஆண்டுகளுக்குள் பிறந்தவர்கள் அதாவது, சுமார் 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் எல்லாம் முன்கூட்டியே பணி ஓய்வு பெறும் நேர சுதந்திரத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். இதை ‘ஃபயர்’ (FIRE – Financial Independence, Retire Early) என்று சொல்கிறார்கள். அதாவது, ‘நிதிச் சுதந்திரம், சீக்கிரம் ஓய்வு’ என்பது இதன் அர்த்தம் ஆகும்.

இன்றைய இளைஞர்கள் முன்கூட்டியே வேலையிலிருந்து விடுதலை பெற பெரிதும் விரும்புகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள், வேலைகளைச் செய்ய விரும்புகிறார்கள். இதனால், 40, 45 வயதில் வேலையை விட்டு விலகத் திட்டமிடுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், மன அழுத்த மான வேலை, வேலையில் சலிப்பு போன்றவை.

வருமானத்தை அதிகரிக்கும் வழி…

முன்கூட்டியே வேலையிலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும்? அதற்கு இளைஞர்கள் குறுகிய காலத்தில் அதிகமாகச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் வேண்டும். இதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று, சேமிப்பை அதிகரிக்க வேண்டும்; இரண்டு, செலவைக் குறைக்க வேண்டும். மூன்று, சம்பாத்தியத்தை அதிகரிக்க வேண்டும். குறைவான சம்பளத்தில் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது என்பது கஷ்டமாகும். அத்தியாவசிய செலவுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, போக்குவரத்துச் செலவு, குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகை, வீட்டு வாடகை, சாப்பாடு செலவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது. எனவே, வருமானத்தை அதிகரிப்பது மட்டும்தான் ஒரே வழி. அதைச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நேரத்தைத் திட்டமிடுங்கள்…

ஒரு நாளில் எல்லோருக்கும் 24 மணி நேரம் இருக்கிறது. இளைஞர்கள் அவர்களின் 24 மணி நேரத்தை எப்படி செலவிடு கிறார்கள் என பார்க்க வேண்டும்.இந்த 24 மணி நேரத்தை மூன்று எட்டாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். முதல் எட்டு மணி நேரத்தை உடல் நலத் தேவை களுக்கு ஒதுக்க வேண்டும். அதாவது, சாப்பிடுவது, உடற் பயிற்சி, தூங்குவதற்கு என ஒதுக்க வேண்டும். இன்றைக்குப் பெரும் பாலானோர் எட்டு மணி நேர தூக்கத்தை ஏழு, ஆறு மணி நேர மாகக் குறைத்துவருகிறார்கள்.

இரண்டாம் எட்டு மணி நேரத்தைப் பணம் சம்பாதிக்கும் வேலைக்காக அதாவது, அலுவலக வேலை செய்வது, தொழில் செய்வதற்காக ஒதுக்க வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமில்லை; குறைந்தபட்சம் 8 மணி நேரம் வேலை பார்த்தாக வேண்டும்.

மீதி உள்ள எட்டு மணி நேரத்தை இளைஞர்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்வதில்லை; பலர், வேலை செய்யும் அலுவலகத்தில் அதிக நேரம் இருப்பது, அதிக தூரம் பயணம் செய்து அலுவலகம் சென்றுவருவது என்று இருக் கிறார்கள். அது போக, சிறிது நேரம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் செலவிட வேண்டிய அவசியமும் இருக்கிறது. பலர் மிக அதிக நேரத்தைப் பொழுதுபோக்குக்காக செலவிடு கிறார்கள். குறிப்பாக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங் களில் அதிக நேரத்தை இளைஞர்கள் செலவிடுகிறார்கள். இந்தக் கடைசி எட்டு மணி நேரத்தில் தினசரி சில மணி நேரத்தைக் கூடுதலாகச் சம்பாதிக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் பலரை நமக்குத் தெரியும். எம்.பி.பி.எஸ் என்பதே மிகப் பெரிய படிப்பாக இருந்தாலும், அவர்கள் கூடுதலாக எம்.எஸ், எம்.டி போன்ற படிப்புகளை முடித்திருப்பார்கள். இவை தவிர, பல சிறப்புப் படிப்புகளையும் படித்திருப்பார்கள். இந்தக் கூடுதல் படிப்புகள் அவர்களின் வருமானத்தை, கட்டணங் களை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மருத்துவர்கள்போல, இளைஞர்கள் அவர்களை உயர்த்திக்கொண்டு, அதிகம் சம்பாதிக்க தினசரி ஒரு மணி நேரம் செலவிட்டால் போதும். அடுத்த ஓராண்டுக் காலத்தில் வருமானம் பல மடங்கு அதிகரித்துவிடும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

அதிக வருமானத்தைப் பெறும் வழிகள்!

ஒருவர் தொழில் முறை வல்லுநர் (Professional) என்பதிலிருந்து நிபுணராக (Expert) மாறும்போது சம்பளம் / வருமானம் தானாகவே பல மடங்கு உயரும். மருத்துவர்கள், பொறியாளர்கள், வரித்துறை நிபுணர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் கூடுதலான வருமானத்தைச் சம்பாதிக்க முடியும்.

இந்தக் கூடுதல் வருமானத்தை மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற குறிப்பிட்ட சிலர் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்பதில்லை. நன்கு சமையல் செய்யத் தெரியும் என்பவர், அழகுக் கலை, ஆடை வடிவமைப்பில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தருவதில் ஆர்வமுள்ளவர்கள் என எந்த வகையில் திறமை இருந்தாலும், மாலை நேரத்தில் அல்லது வார இறுதி நாள்களில் அந்தத் திறமையைப் பயன்படுத்தி, கூடுதலான வருமானத்தை ஒருவரால் ஈட்ட முடியும். இதற்கு செய்ய வேண்டிய ஒரே விஷயம், நம் திறமையை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்வதுதான்.

உங்களுக்கு உள்ள திறமையை வெளிப்படுத்தி, அதைப் பலரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் துறை சார்ந்த விஷயங்களை நீங்கள் இதில் தொடர்ந்து எழுதும்போது, உங்கள் நிபுணத்துவத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதுடன், நிபுணத்துவம் மிக்க ஆலோசனைகளை உங்களிடம் இருந்து பெற உங்களுக்குப் பணம் செலுத்தவும் செய்வார்கள். 365 நாளில் தினசரி ஒரு மணி நேரம் இப்படி உங்களை நிபுணராக, அங்கீகாரம் பெற்ற நபராக மாற்ற செலவிட்டால், உங்களின் மாதச் சேமிப்பு என்பது 15,000 ரூபாய்க்குமேல் இருக்கும். இன்றைய இளைஞர்கள் இப்படி திட்டம் போட்டு செயல்படத் தொடங்கினால், 40 வயதில் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகிவிட முடியும். இந்த எளிய வழிகாட்டுதலை இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவார்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *