இதுதான் உலகில் முதல்முறை.. சீனாவில் வெடித்த AI Bubble.. 40% வரை சரிந்த வேல்யூவேஷன்! | China AI Bubble Bursts? STAR50 Index Falls 40%, $480 Billion Market Value Wiped Out in few months

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: உலகளவில் தொழில்நுட்ப பங்குகள் சமீப காலமாக சரிவை சந்தித்து வரும் நிலையில், சீனாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் அதை விட மிக பெரியளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஏஐ நிறுவனங்களின் அசல் மதிப்பை விட பல மடங்கு அதன் விலை ஏறி இருப்பது, சீன பொருட்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதிக்கக்கூடிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் AI Bubble வெடித்துவிட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான். எல்லா துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் அதிகரித்தது. மேலும், ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளும் குவிந்தன. ஏஐ என்று பெயர் இருந்தாலே முதலீடுகள் எக்குத்தப்பாக குவிய ஆரம்பித்தன. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேல்யூவேஷன் கூட எங்கோ போனது.

China AI Bubble Bursts

AI Bubble வெடித்தது

ஆனால், இது நிலையான வளர்ச்சி இல்லை. இது குமிழி, அதாவது Bubble போன்றது என வல்லுநர்கள் எச்சரித்தனர். இந்த குமிழி வெடிக்கும் போது மிக பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள். கிட்டத்தட்ட பெரும்பாலான முதலீட்டாளர்கள் இது வெடிக்க போவது உறுதி.. எப்போது என்று மட்டுமே தெரியாது எனவும் குறிப்பிட்டனர்.

கடும் சரிவு

இந்தச் சூழலில் தான் முதல்முறையாக சீனாவின் AI Bubble இப்போது வெடித்துள்ளதாக தெரிகிறது. சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய STAR50 குறியீடு, 4 மாதங்களில் சுமார் 40% சரிந்துள்ளது. இதனால் சுமார் 480 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 லட்சம் கோடி) சந்தை மதிப்பு காணமல் போய் இருக்கிறது.

இந்த வீழ்ச்சி சீனாவின் பங்குச்சந்தையை மட்டுமல்லாமல், AI துறையின் வளர்ச்சிக்கு தேவையான முதலீட்டையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பால் உயர்ந்து வந்த சீன பங்குச் சந்தை இதனால் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் முயற்சிக்கும் இது பின்னடைவாக அமைந்துள்ளது.

சீனாவின் முக்கிய பங்குக் குறியீடான CSI300, கடந்த ஜூன் மாதத்தில் எட்டிய உச்சத்திலிருந்து சுமார் 20% சரிந்துள்ளது. ஏஐ காரணமாக இத்தனை காலம் ஏஐ மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் இஷ்டத்திற்கு ஏறி வந்த நிலையில், இப்போது அந்த பபிள் வெடித்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சீனாவில் AI பங்குகள்

சீனாவில் AI பங்குகள் என்பது ஷேர் மார்க்கெட்டின் மொத்த மதிப்பில் 42% பங்கு வகிக்கிறது. இதனால் AI பங்குகளில் ஏற்பட்ட சரிவிலிருந்து சிறு முதலீட்டாளர்கள் தப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. உதாரணமாக ரோபோ தயாரிப்பு நிறுவனமான யூன்ட்ரீ பங்குகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பங்குச்சந்தையில் வந்தது. அப்போது இருந்த விலையில் இருந்து அது சரிபாதியாக சரிந்துள்ளது. இது தவிர சிப் தயாரிப்பு நிறுவனமான CXMTயின் பங்குகள் 25%க்கும் மேல் சரிந்துள்ளன. இப்படி பல நிறுவனங்களின் பங்குகளை நாம் உதாரணமாக சொல்லலாம்.

அமெரிக்காவும் காரணம்!

சீன நிறுவனங்களின் பங்குகள் சரிய அமெரிக்காவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது அமெரிக்கா தனது டேட்டா சென்டர்களுக்கு சீன நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்க தடை விதித்தது. இதுவும் சரிவுக்கு முக்கிய காரணமாக மாறியது. இப்படி ஏஐ பங்குகள் சரிய பல காரணங்களை சொல்கிறார்கள். இந்த சரிவால் பங்குச்சந்தையில் பட்டியலிட தயாராக இருந்த பல ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் பிளானை அப்படியே ஒத்திவைத்துவிட்டன.

அதேநேரம் சில முதலீட்டு நிபுணர்கள் இந்த சரிவை நீண்டகால முதலீட்டிற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். இந்த நேரத்தில் உள்ளே புகுந்து பங்குகளை வாங்கினால் பயங்கர லாபம் என்பது அவர்கள் கருத்து. இருப்பினும், விலை குறைந்துவிட்டது என்பதற்காக மட்டும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்துவிடக்கூடாது. சரியான பங்குகளை தேர்வு செய்து கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *