கோர்ட் வளாகத்தில் வைத்து கை துண்டிப்பு; துப்பாக்கிச்சூடு- குற்றவாளியைக் கொல்ல நடந்த பரபரப்பு சம்பவம்

Spread the love

புனே, சிவாஜிநகர் கோர்ட்டில் ஆஜராவதற்காக மந்தர் மாருதி என்பவர் வந்தார். அவர்மீது கடந்த ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிலம் மற்றும் நிதிப் பிரச்னை தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புனேயில் சுபம் என்பவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக மாருதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக புனே சிவாஜி நகர் கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவர் கோர்ட் வளாகத்தில் நின்றபோது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர், மாருதி மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தோட்டாக்கள் குறி தவறின.

உடனே அவர்கள் வாகனங்களில் வைத்திருந்த கூரிய ஆயுதங்களால் மாருதியின் ஒரு கையை வெட்டி, துண்டாக்கினர். இதனை நேரில் பார்த்தவர்கள் அதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பின்னர் அக்கும்பல் மாருதியை மிரட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தங்களது இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. மாருதி உயிருக்குப் போராடியபடி ரத்தக்காயங்களுடன் உதவி கேட்டு கத்திக்கொண்டிருந்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மாருதியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் நடந்த புனே கோர்ட்

சம்பவம் நடந்த புனே கோர்ட்

அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த கொலைக்குப் பழிவாங்க இத்தாக்குதல் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாராமதி எம்.பி சுப்ரியா சுலே, “‘நீதிமன்றம் என்பது சாதாரண மக்களுக்கு ஒரு நீதிக்கோயில் ஆகும். ஒவ்வொரு குடிமகனும் நீதியையும் பாதுகாப்பையும் தேடி வரும் இந்தப் புனிதமான இடத்திலேயே, பட்டப்பகலில் ரத்தம் சிந்தப்பட்டால், புனேயைச் சேர்ந்த சாதாரண மக்கள் இனி பாதுகாப்பு கேட்டு யாரிடம் செல்வார்கள்? புனேவின் ஒவ்வொரு குடிமகனும் இப்போது புனேவில் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். புனேவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *