நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
“நீட் ஒழிக்கப்பட வேண்டும்… மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்” என்ற முழக்கங்கள் ஒலிக்க, கோவையின் சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வை அறிவித்தது. இதையடுத்து டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது காவல்துறை தடியடி நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவை ஜீவா இல்லத்தில் நீட் எதிர்ப்பாளர்களும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பொதுவுடமை சிந்தனையாளர்கள், திராவிடக் கருத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.
திரை விரித்து அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இளைஞர்களும் பொதுமக்களும் பறை இசைத்தும், புரட்சிப் பாடல்களைப் பாடியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“எத்தனை நாள்கள் ஆனாலும் இங்கேயே தங்கி, இங்கேயே உணவருந்தி, போராட்டத்தைத் தொடர்வோம்” என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் பேசிய கோவை காக்ரோச் ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர், “எங்கள் தலைமுறையும் நீட் தேர்வால் சீர்குலைய நாங்கள் விரும்பவில்லை. நீட் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.

கோவை AIYF மாவட்டச் செயலாளர் மௌ. குணசேகர் பேசுகையில், “நீட் எதிர்ப்புக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் அமைத்தது தமிழ்நாடுதான். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, நாட்டுக்கே முன்னுதாரணமாகச் செயல்பட்ட மாநிலமும் தமிழ்நாடுதான்” என்றார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் தரப்பிலும் NTA தரப்பிலும் இதுவரை அதிகாரபூர்வ பதில் வெளியாகவில்லை.
நீட் தொடர்பாக மத்திய அரசும் NTA வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.